Published : 21 Jun 2014 09:14 AM
Last Updated : 21 Jun 2014 09:14 AM
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் தேர்தலில் போட்டியிட சீனிவாசனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததையடுத்து அவரது பெயரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இறுதி செய்து ஐ.சி.சி.க்கு பரிந்துரைத்துள்ளது.
பிசிசிஐ தலைவராக இருந்தவர் சீனிவாசன். ஐபிஎல்-2013 போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரின்பேரில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவரை பதவி நீக்கம் செய்தது. அவருக்குப் பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சிவ்லால் யாதவ் ஆகியோர் பி.சி.சி.ஐ. நிர்வாகத்தைக் கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன், இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 13 பேர் மீதான சூதாட்டப் புகார் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு விசாரித்து வருகிறது. இக்குழுவில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர ராவ், மூத்த வழக்கறிஞர் நிலோய் தத்தா, மூத்த ஐபிஎஸ் அதிகாரி பி.பி.மிஸ்ரா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு சீனிவாசன் போட்டியிடுகிறார். அவரது பெயர் கடந்த பிப்ரவரி யில் சிங்கப்பூரில் நடந்த ஐ.சி.சி. மாநாட்டிலேயே பரிந்துரைக்கப் பட்டது. இந்நிலையில் ஐ.சி.சி. தலைவர் பதவி தேர்தலில் போட்டியிட சீனிவாசனுக்கு தடை விதிக்கக் கோரி பிஹார் கிரிக்கெட் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வலி யுறுத்தியது. ஆனால் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.
ஐ.சி.சி. விதிகளின்படி மாநாட் டுக்கு முன்னதாக வேட்பாளர் பெயரை இறுதியாக பரிந்துரை செய்வது அவசியம். சீனிவாசன் பெயரை பரிந்துரை செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் பி.சி.சி.ஐ. ஆலோசனை நடத்தியது. அவர்களின் கருத்துக்களுடன் சீனிவாசனை வேட்பாளராக அறிவித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பி.சி.சி.ஐ. அனுப்பி வைத்துள்ளது.
ஐ.சி.சி.-யின் 6 நாள் மாநாடு வரும் 23-ம் தேதி ஆஸ்திரேலியா வில் உள்ள மெல்போர்னில் தொடங்குகிறது. இம்மாநாட்டில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளில் மாற்றம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது. இதையடுத்து, ஐ.சி.சி. தலைவர் பதவியில் சீனிவாசனை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. இம்மாதம் 29-ம் தேதி அவர் ஐ.சி.சி. தலைவராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT