Published : 31 Jan 2022 12:04 PM
Last Updated : 31 Jan 2022 12:04 PM

சமூக நலன் முதல் விவசாய புரட்சி வரை: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை | முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி: சிறு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே நாட்டின் பிரதான இலக்கு என நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நிதி ஆண்டுக்கான (2022-23) பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை (ஜன 31) தொடங்கியது. தொடக்க நாளான இன்று இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றினார். அந்த உரையிலிருந்து முக்கிய அம்சங்கள்:

சுகாதாரத் துறையில் சாதனை: * உலகம் முழுவதுமே கரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், நம் நாட்டின் சுகாதாரத் துறை ஊழியர்கள், மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் இந்தப் போரை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளனர். தடுப்பூசித் திட்டம் தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. இப்போது 15 முதல் 18 வயதுடையோருக்கான தடுப்பூசித் திட்டமும் தொடங்கியுள்ளது. தவிர முன்களப் பணியாளர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் முன்னெச்சரிக்கை டோஸ் வழங்கப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் இன்று உலகை தொற்றில்லா இடமாக மாற்ற உதவுகிறது. இதுவரை 90% மேலானோர் முதல் தவணை தடுப்பூசியும், 70%-க்கும் மேலானோர் இரு தவணைகளும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஆயுஷ்மான் பாரத், ஜன் அவுஷாத் திட்டங்களால் மக்களுக்கு குறைந்த விலையில் மருத்துவ சேவையை ஏழை, எளியோர்க்கும் சாத்தியமாகியுள்ளது.

* உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையம், இந்தியாவில் அமையும்.

சமூக நலன் பேணுகிறது:

* அரசாங்கம் பி.ஆர்.அம்பேத்கரின் கொள்கையைப் பின்பற்றுகிறது. நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறுகின்றனர்.
* அரசாங்கம், பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் வழங்குகிறது.
* ஏழைகள் பசியுடன் இல்லாத சூழலில் எனது அரசு உறுதி செய்துள்ளது.
* 2 கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.
* 6 கோடி வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
* பெண்களுக்கு அதிகாரமளித்தலில் அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது.
* பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ பிரச்சாரத்துக்குப் பலன் கிடைத்துள்ளது.
* நாடு முழுவதும் பள்ளிச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

விவசாயத்தில் புரட்சி!

* விவசாயத் துறையில் அரசு புரட்சி செய்து வருகிறது. குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.
* 1900 கிசான் ரயில்கள் மூலம் 6 லட்சம் டன் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
* நதிநீர் இணைப்புக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
* சிறு விவசாயிகளின் நலன் மீதே அரசின் கவனம் உள்ளது.

பாதுகாப்புத் துறையில் மேக் இன் இந்தியா!

* அத்தனை சவால்களுக்கும் இடையே ஆப்கனில் இருந்து இந்தியர்களையும், நமது ஆப்கன் நண்பர்களையும் நாம் பாதுகாப்புடன் மீட்டுள்ளோம்.
* பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தியில் மேக் இன் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
* அரசாங்கம், தேசப் பாதுகாப்பை உறுதி செய்வதில் விழிப்புடன் இருக்கிறது.
* இந்திய அரசாங்கள் ட்ரோன் தொழில்நுட்பத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

பொருளாதாரத்தில் மேம்பாடு!

* இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது.
* ஒரு லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.
* சிறு,குறு,நடுத்தர தொழில்களுக்கு ரூ.3லட்சம் கோடியில் கொலேட்டரல் ஃப்ரீ கடன்களை வழங்கியுள்ளது.
* இந்தியாவை ஏற்றுமதி மையப்புள்ளியாக மாற்ற உற்பத்தி சார் ஊக்குவிப்புத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
* இணைய இணைப்புகள், செல்போன் சாதனங்களும் இந்தியாவில் விலை குறைந்துள்ளன.

இதர சாதனைகள்!

*துர்கா பூஜையை யுனஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் இணைத்து அங்கீகரித்துள்ளது.
* நாடு முழுவதும் 36,500 கி.மீ சாலை அமைக்கப்பட்டுள்ளது.
* டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் நமது இளைஞர்கள் தங்களை நிரூபித்துள்ளனர்.
* ஜம்மு காஷ்மீரில் ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
* ஸ்ரீநகர் ஷார்ஜா சர்வதேச விமானப் போக்குவரத்தைத் தொடங்கியுள்ளோம்.
* 8 மாநிலங்களில் 11 மெட்ரோ லைன் சேவைகளைத் தொடங்கி லட்சக்கணக்கான மக்கள் பயனடையச் செய்துள்ளோம்.
* வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை உறுதி செய்து வருகிறோம்.
* நாடு முழுவதும் 126 மாவட்டங்களில் நக்சல் ஆதிக்கம் இருந்த நிலையில் இத்தனை ஆண்டுகளில் அது 70ஆகக் குறைந்துள்ளது.

இவ்வாறு குடியரசுத் தலைவர் பேசியிருக்கிறார்.

முதல் நாளன்று குடியரசுத் தலைவர் உரை மட்டுமே இடம்பெறும். அதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார். பின்னர் அவர் நாளை (பிப்ரவரி 1) 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பிப்ரவரி 2-ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். இறுதியில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறும்.

முன்னதாக இன்றைய கூட்டத்தொடரை ஒட்டி செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "நாட்டில் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியமானது. ஆகையால் எம்.பி.க்கள் அனைவரும் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் அனைத்துப் பிரச்சினைகள் குறித்து அவையில் விவாதிக்கும்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x