Published : 31 Jan 2022 08:25 AM
Last Updated : 31 Jan 2022 08:25 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் சுமார் 24 கோடி பேர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 20 ஆண்டுகளாக சமாஜ்வாதி, பிஎஸ்பி மற்றும் பாஜவினர் இடம்பெற்ற மும் முனை போட்டியே தொடர்கிறது. சமாஜ்வாதி கட்சி முஸ்லிம் மற்றும் யாதவர், பகுஜன் சமாஜ் கட்சி தலித், பாஜக உயர்க்குடிகள் என தமக்காக ஒரு வாக்கு வங்கிகளை உருவாக்கின. இம் மூன்று கட்சியினருமே யாதவர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான ஒபிசியினரை கண்டுகொள்ளவில்லை.
உ.பி.யில் ஒபிசி பிரிவினர், சுமார் 35 சதவிகிதம் உள்ளனர். இவர்களில் கணிசமாக உள்ளயாதவர்களில் பெரும்பாலான வர்கள் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதியுடன் உள்ளனர். ஒபிசியின் மற்ற சமூகத்தினரான குர்மி, லோதி, மவுரியா, காஷ்யாப், செய்னி, சாஹூ, நிஷாத், டெலி, கோரி உள்ளிட்டோரும் சமீப காலமாக அதிக முக்கியத்துவம் பெற தொடங்கி விட்டனர். இதனால், இந்த முறை உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் யாதவர் அல்லாத ஒபிசி பிரிவினரை கவர பாஜக மற்றும் சமாஜ்வாதி இடையே கடும் போட்டி உருவாகி உள்ளது.
கடந்த 2001-ல் முதல்வராக இருந்த ராஜ்நாத் சிங் ஆட்சியில் ஒபிசியினர் முதல்முறையாக கவனம் பெற்றனர். இவர்களுக்காக ஒரு சமூக நீதி குழு அமைத்தார் ராஜ்நாத். இவர்களை குழுக்களாக தரவரிசைப்படுத்தி அவர்களுக்கு 14 சதவிகித ஒதுக்கீடு வழங்கவும் அக்குழு பரிந்துரைத்தது.
எனினும், அடுத்து வந்த தேர்தலில் பாஜக 3-வது இடத்தையே பிடித்தது. பாஜக ஆதரவுடன் உ.பி.யில் பகுஜன் சமாஜ் ஆட்சி அமைத்தது. அப்போது பாஜக அமைத்த குழுவை முதல்வர் மாயாவதி ரத்து செய்தார்.
மீண்டும் கடந்த 2014 மற்றும் 2019 மக்களவை மற்றும் 2017 சட்டப்பேரவை தேர்தல்களில் ஒபிசி வகுப்பினரின் வாக்குகளை பாஜக குறி வைத்ததால் அவை முக்கியத்துவம் பெற தொடங்கின. யாதவர் அல்லாத ஒபிசியுடன், உயர் சமூகம் மற்றும் தலித்துக்களின் வாக்குகளும் பாஜக.வுக்கு கிடைத்தன. இதன் பலனாக, மத்தியிலும், உ.பி.யிலும் ஆட்சி அமைக்கவும் உதவியது. தற்போதைய தேர்தலிலும் ஒபிசியினர் முக்கியத்துவம் பெற்று விட்டனர்.
தற்போதைய தேர்தலில் பாஜக.வுக்கு போட்டியாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ், ஒபிசியினருக்கு குறி வைத்துள்ளார். தனது கட்சி வேட்பாளர்களை பாஜக வழியில் யாதவர் அல்லாத ஒபிசியினருக்கும் பிரித்து அளித்துள்ளார். ஒபிசி.யினர் ஆதரவின் அப்னா தளம் மற்றும் நிஷாத் கட்சிகள் பாஜக.வின் கூட்டணியில் உள்ளன.
இதுவரையிலும் பாஜகவுடன் இருந்த சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியை இந்த முறை சமாஜ்வாதி தனது கூட்டணியில் சேர்த்துள்ளது. எனவே, மார்ச் 10-ல் வெளியாகும் உ.பி. தேர்தல் முடிவுகளில் வெற்றி பெறும் கட்சிக்கு அடிப்படையாக ஒபிசி வாக்குகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT