Published : 30 Jan 2022 01:17 PM
Last Updated : 30 Jan 2022 01:17 PM

பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கிய உடுமலை ஏழைப்பெண்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வியப்பு

புதுடெல்லி: மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, உடுமலையைச் சேர்ந்த ஏழைப் பெண் தனது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு தனது சேமிப்பில் இருந்து 1 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்ததை வியந்து பாராட்டினார்.

கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று வானொலி மூலம் உரையாற்றினார். இது 85-வது மன் கி பாத் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

‘‘ஜன.,30 தேதியானது மஹாத்மா காந்தியின் கொள்கைகள் குறித்து நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தாண்டு நேதாஜி பிறந்த நாள் அன்று குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் துவங்கியது. மஹாத்மா நினைவு நாள் வரை நீடிக்கும். இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் டிஜிட்டல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாடு இதனை வரவேற்ற விதத்தையும், ஒவ்வொரு மூலையிலும் உற்சாகம் எழுந்ததை நாம் மறக்க முடியாது.

அமர்ஜவான் ஜோதியில் உள்ள விளக்கு, தேசிய போர் நினைவிடத்தில் இணைக்கப்பட்டதை நாம் பார்த்தோம். இந்த உணர்ச்சிகரமான நாளில், நாட்டு மக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர். முன்னார் ராணுவ வீரர்கள் சிலர், அமர்ஜவான் ஜோதி, குறித்து கடிதம் எழுதி உள்ளனர். தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று பாருங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

நாம் அனைவரும் நமது கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இளைஞர்களை கொண்ட நாட்டுக்கு சாத்தியம் அற்றது என்று ஏதுமில்லை. இளைஞர்களை கொண்ட நாட்டினால் எதனையும் சாதிக்கமுடியும்.

தமிழகத்தின், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வசிக்கும் தாயம்மாள் என்ற பெண் செயல் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. அவருக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக, இளநீர் விற்றே அவரது குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவரது குழந்தைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

அந்த பள்ளியின் உள்கட்டமைப்பை மேற்கொள்ள
இளநீர் விற்றதன் மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்தை பள்ளிக்கு நன்கொடையாக தாயம்மாள் அளித்தார். இதனை செய்வதற்கு மிகப்பெரிய மனதும், மிகப்பெரிய சேவை செய்யும் மனதும் தேவை.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x