Published : 30 Jan 2022 12:26 PM
Last Updated : 30 Jan 2022 12:26 PM
புதுடெல்லி: சமாஜ்வாதியின் சிகப்பு தொப்பி, ராமபக்தர்களின் ரத்தக்கறை படிந்தது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சுமத்தி உள்ளார். முசாபர்நகர் கலவரத்திலும் நூற்றுக்கணக்கான இந்துக்கள் பலியாகவும் இக்கட்சியே காரணம் என அவர், புகார் கூறியுள்ளார்.
உ.பி. யின் தேர்தலில் சட்டப்பேரவை தேர்தலுக்கானப் பிரச்சாரம் சூடு பிடிக்கத் துவங்கி உள்ளது. இதில், தொடர்ந்து பல சலூகை அறிவிப்புகளை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் வெளியிட்டபடி உள்ளார்.
கடந்த 1990 இல் முலாயம்சிங் முதல்வராக இருந்த போது அயோத்தியில் ராமர் கோயிலுக்கான கரசேவகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டிருந்தார். அக்டோபர் 30, நவம்பர் 2 என இரண்டு முறை நடைபெற்ற இச்சமபவத்தில் உபி போலீஸாரின் குண்டுகளால்16 பேர் கொல்லப்பட்டனர்.
இதை குறிப்பிட்டு பாஜகவின் முதல்வர் வேட்பாளருமான யோகி,உ.பி. வாசிகளை எச்சரித்துள்ளார். சமாஜ்வாதிக்கு வாக்களிப்பது என்பது கலவரங்களில் கொல்லப்பட்ட அப்பாவிகளை அவமானப்படுத்தும் செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது காஜியாபாத்தில் முராத்நகரில் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் யோகி, ‘சமாஜ்வாதிக்கு ஆட்சியில் அமரும் தகுதியே கிடையாது. ஏனெனில், அக்கட்சியின் ஆட்சியில் பெண்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கவில்லை.
முசாபர்நகர் கலவரத்தில் அறுபதிற்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களில், 1500 பேர் சிறையில் தள்ளப்பட்டனர். இதுதான் சமாஜ்வாதியின் அடையாளம்.
அக்கட்சியினரின் சிகப்பு தொப்பியில் ராமபக்தர்களின் ரத்தக்கறைகள் படிந்துள்ளன. இவர்கள் பார்வையில் வளர்ச்சி என்பது முஸ்லீம்களின் இடுகாடுகளுக்கு காம்பவுண்டு சுவர்கள் எழுப்பது மட்டுமே.
பாஜகவை போல் அவர்களால் விமானநிலையம், நெடுஞ்சாலைகள் ஏழைகளுக்கான மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதில்லை. 2017 ஆம் ஆண்டிற்கு முன் காவடி யாத்திரையில் தாக்குதல்கள் நடைபெற்றன.
ஆனால், பாஜக ஆட்சியில் காவடிகளுக்காக ஹெலிகாப்டர்களை அனுப்பி அவர்கள் மீது மலர்களை தூவுகிறது. காவடிகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.’ எனத் தெரிவித்தார்.
சமாஜ்வாதி தலைவர் தனது தேர்தல் வாக்குறுதிகளில் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக அறிப்பதாகவும் அறிவித்துள்ளது. இதன் மீது கேள்வி எழுப்பிய முதல்வர் யோகி, 24 மணி நேரம் மின்சாரம் அளிக்கமுடியாத ஆட்சியில் அது இலவசமாக எப்படி தர முடியும்? எனக் கேட்டுள்ளார்.
சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சிகளும் குற்றப்பின்னணி கொண்டவர்களை தேர்தல் போட்டியிட வைப்பதாகவும் முதல்வர் யோகி குற்றம் சுமத்தினார். இவர்கள் எம்எல்ஏவானால் துப்பாக்கிகளை விநியோகிப்பார்களே தவிர மலர்கள் அல்ல எனவும் அவர் விமர்சித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT