Published : 28 Jan 2022 07:45 PM
Last Updated : 28 Jan 2022 07:45 PM
புதுடெல்லி: டெல்லியிலிருந்து ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் பாஜக சதித்திட்டம் உள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக சட்டப்பேரவை நடைபெற உள்ளது. தற்போது அம்மாநிலத்தில் அனைத்துக் கட்சிகளும் சூடுபறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், முசாஃபர்நகரில் ராஷ்ட்ரீய லோக் தள் தலைவர் ஜெயந்த் சவுத்ரியுடன் இன்று தேர்தல் கூட்டணி தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுவதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் சென்ற ஹெலிகாப்டரில் வழியிலேயே நிறுத்தப்பட்டது. டெல்லியிலேயே தரையிறங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ளாத நிலை ஏற்பட்டதை அடுத்து அகிலேஷ் யாதவ் உடனே ட்விட்டரில் அடுத்தடுத்த பதிவுகளில் பாஜகவை விமர்சித்து காட்டமான பதிவுகளை வெளியிட்டார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:
எந்தவித காரணமும் இன்றி எனது ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டுள்ளது. முசாபர் நகருக்கு ஹெலிகாப்டரில் செல்ல எனக்கு அனுமதிவழங்கப்படவில்லை. அதேநேரம் பாஜகவின் உச்சபட்ச தலைவர் ஒருவருக்கு இங்கிருந்து விமானத்தில் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாஜக தோல்வி பயத்தில் உள்ளதால் அவர்கள் இத்தகைய சதிச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். என்னுடைய ஹெலிகாப்டர் வழியிலேயே தரையிறக்கப்பட்டதற்கு பின்னால் இருப்பது பாஜகதான் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். இது அதிகார துஷ்பிரயோகம்.''
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
அரசு வட்டாரம் மறுப்பு: அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவித ஆதாரமுமில்லை. உண்மையில் அகிலேஷ் யாதவ்வின் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதற்கு வானில் தொடர்ந்து ஏற்பட்ட அதிகப்படியான விமானப் போக்குவரத்தும் அவரது ஹெலிகாப்டருக்கு எரிபொருள் நிரப்புவதும்தான் காரணம் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...