Published : 28 Jan 2022 06:45 PM
Last Updated : 28 Jan 2022 06:45 PM
புதுடெல்லி: குடியரசு தின விழாவை தொடர்ந்து பாசறை திரும்புதல் நிகழ்ச்சி முதல் முறையாக மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரான ட்ரோன்கள் பங்கேற்று பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்த உள்ளன.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்த ஆண்டின் பாசறை திரும்புதல் நிகழ்ச்சியில் புதுமையான ட்ரோன் காட்சிகள் பார்வையாளர்களை கவரும் முக்கிய அம்சமாக இருக்கும். 2022 ஜனவரி 29-ந் தேதி டெல்லியின் இதயப் பகுதியான வரலாற்றுச் சிறப்புமிக்க விஜய் சவுக்கில் ஆயுதப் படைகளின் சுப்ரீம் கமாண்டரான குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு செய்கிறார்.
சுதந்திரத்தின் 75 ஆண்டு காலத்தை விடுதலையின் அமிர்த பெருவிழாவாக இம்முறை கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேக் இன் இந்தியா முன்முயற்சியின் கீழ் இது கருத்துருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினர் பங்கேற்கும் மொத்தம் 26 பாண்ட் இசை அணிவகுப்புகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தும். முதல் பாண்ட் இசை ‘வீர் சைனிக்’ இசைக்கப்படும். இதனைத் தொடர்ந்து, பைப்ஸ் & டிரம்ஸ் பாண்ட், சிஏபிஎஃப் பாண்ட், விமானப்படை பாண்ட், கடற்படை பாண்ட், ராணுவ பாண்ட் ஆகியவை இசைக்கப்படும். கமாண்டர் விஜய் சார்லஸ் டிகுருஸ் இதன் முதன்மை இசை நடத்துனராக இருப்பார்.
விடுதலையின் அமிர்த பெருவிழாவை கொண்டாடும் வகையில், கேரளா, ஹிந்த் கி சேனா, ஆ மேரே வட்டான்கே லோகான் ஆகிய புதிய மெட்டுக்கள் இசைக்கப்படும். மிகவும் பிரபலமான மெட்டான “சாரே ஜகான் சே அச்சா“ என்ற மெட்டுடன் நிகழ்ச்சி நிறைவடையும்.
போர்க்களத்திலிருந்து சூரிய அஸ்தமன நேரத்தில் படைகள் பாசறைக்கு திரும்பும் நூற்றாண்டு பழமையான பாரம்பரிய நிகழ்ச்சியாக பாசறை திரும்புதல் நடைபெற்று வருகிறது. ஊதுகுழல்கள் ஊதப்பட்டதும் படைகள் சண்டையை நிறுத்தி தங்கள் ஆயுதங்களை உறையிலிட்டு போர்க்களத்தை விட்டு திரும்புவது வழக்கமாகும். இந்த வழக்கம் தொடர்ந்து வருகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT