Published : 28 Jan 2022 03:45 PM
Last Updated : 28 Jan 2022 03:45 PM

ரயில்வே தேர்வு வன்முறை: முழு அடைப்பு போராட்டத்தால் பற்றி எரியும் பிஹார்

பாட்னா: ரயில்வே பணியாளர் வாரியத்தின் தேர்வு விவாகரத்துக்கு எதிராக பிஹார் மாணவர் அமைப்புகள் மற்றும் அம்மாநில எதிர்க்கட்சிகளால் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் டயர்கள் எரிக்கப்பட்டும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டும் வருகிறது.

ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் 2021-ம் ஆண்டுக்கான என்டிபிசி (Non-Technical Popular Categories) தேர்வை 2 கட்டங்களாக நடத்த ரயில்வே முடிவு செய்ததற்கு எதிராக பிஹார் மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, மாணவர்களின் போராட்டத்தால் தேர்வை ரயில்வே வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும், மாணவர்களின் கருத்துகளை கேட்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வன்முறையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட தூண்டியதாக பிரபல யூடியூபர் கான் சார் உள்ளிட்ட 6 ஆசிரியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்குப் பதிவு நடவடிக்கைகளை கண்டித்து இன்று பிஹாரில் மாணவர்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். முழு அடைப்பு போராட்டத்துக்கு அகில இந்திய மாணவர் சங்கம் அழைப்பு விடுத்து இருந்த நிலையில், பிஹாரின் முக்கிய எதிர்கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி இதற்கு முழு ஆதரவு தெரிவித்து களமிறங்கியுளளன. மற்ற எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பிஹாரில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் விகாஷீல் இன்சான் கட்சிகளின் ஆதரவுடனும் தொடங்கிய முழு அடைப்பு போராட்டத்தால் இன்று காலை முதலே பிஹார் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்ஐஆர்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

தலைநகர் பாட்னா உள்பட மாநிலம் முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பாட்னாவில் மறியல் போராட்டமும் நடந்தது. பாட்னாவின் அசோக் ராஜ்பாத் பகுதியில் நடந்த போராட்டத்தில் நடுரோட்டில் டயர்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்தப் பகுதி பிஹாரின் மாநிலத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனை மற்றும் புகழ்பெற்ற சில பள்ளிகள் அமைந்துள்ள பகுதியாகும்.

அதேபோல், பாட்னாவின் வர்த்தக பகுதியான டக் பங்களா கிராஸிங்கில் நடந்த போராட்டத்தில் மேளங்களில் ஒலி எழுப்பி, ரயில்வே வாரியம், மத்திய மற்றும் பிஹார் அரசுகளுக்கு எதிராக முழக்கமிடப்பட்டது. அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜ்பவன் நோக்கி போராட்டக்காரர்கள் சென்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்தபோது அங்கு மோதல் நிலவியது.

சமஸ்திபூர் மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான இளம்பெண்கள் பங்கேற்று போராடினர். பிஹாரின் முக்கிய நகரங்களான பக்சர், ஜெகனாபாத், பாகல்பூர், கதிஹார், பெகுசராய் மற்றும் முங்கேர் ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டங்களுக்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தலைமை தாங்கி வருகின்றனர். இப்படி பிஹார் மாநிலம் முழுவதும் பல இடங்களில் நடந்துவரும் போராட்டங்களால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது தேசிய அளவிலும் கவனம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x