Last Updated : 28 Jan, 2022 11:28 AM

2  

Published : 28 Jan 2022 11:28 AM
Last Updated : 28 Jan 2022 11:28 AM

நாடு முழுவதும் பள்ளிகளைத் திறக்க வலுக்கும் கோரிக்கை: மத்திய அரசு விரைவில் முக்கிய முடிவு

நாடு முழுவதும் ஒமைக்ரானால் ஏற்பட்ட கரோனா மூன்றாவது அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், பள்ளிகளைத் திறக்கலாம் என டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெனோமிக்ஸ் அண்ட் இன்டகிரேடிவ் பயாலாஜி அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

இந்த அமைப்பின் தலைவர் மருத்துவர் அனுராக் அகர்வால் கூறியதாவது:

கரோனா தாக்கம் பரவலாகக் கணிசமாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். கரோனா தொற்று ஏற்படும் என்ற ஆபத்தைவிட கரோனாவுக்கு அஞ்சி பள்ளிகளை மூடிவைப்பதால் மாணவர்களின் உடல் மற்றும் மனநிலையில் ஏற்படும் தாக்கம் மிகவும் மோசமானதாக உள்ளது.

நாம் இதுவரை கிடைத்தத் தரவுகளின் அடிப்படையில் பார்த்தாலே, கரோனாவால் பாதிக்கப்பட்ட, மிக மோசமான விளைவுகளை சந்தித்த குழந்தைகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ளது. மேலும் தற்போது நாடு முழுவதும் 15 வயது முதலான குழந்தைகளுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இனிமேலும் பெற்றோர் அச்சப்படாமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வர வேண்டும். நாடு முழுவதும் 95% மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 164 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டச் சூழலில் ஒமைக்ரான் பாதிப்பும் சற்று குறைவாகவே இருக்கிறது. இச்சூழலில் மக்கள் தங்களின் இயல்பான வாழ்க்கையை பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி மேற்கொள்ளலாம். இயல்பு வாழ்க்கை என்று வரும்போது எனது முதல் முன்னுரிமை பள்ளிகளைத் திறப்பதில் தான் இருக்கிறது.

அனைவரும் கரோனாவின் முடிவுக்காலம் பற்றி பேசுகின்றனர். கரோனா முடிந்துவிட்டதா என்றால் அதற்கு மருத்துவ ரீதியாக நிறைய தரவுகள் தேவைப்படுகின்றன. ஆனால், பள்ளிகளைத் திறக்கும் அளவுக்கு கரோனா முடிவுக்குவந்துவிட்டதா என்று கேட்டால் ஆம் என்பேன். தடுப்பூசித் திட்டத்தால் இது சாத்தியமாகியுள்ளது. இனியும் கரோனா உயிருக்கு அச்சுறுத்தலான நோயில்லை. தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசிகளால் நிச்சயமாக நாம் கரோனாவில் இருந்து தப்பிப்பிழைக்கலாம் என்ற நிலை வர ஆரம்பித்துவிட்டது.
Sars-CoV2 வைரஸ் எப்போது போகும் எனத் தெரியாது. ஆனால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசு முடிவு: இந்நிலையில், நாடு முழுவதும் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா, தேசிய நிபுணர் குழுவிடம் கரோனாவுக்கு ஊடே பள்ளிகளை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களைத் தயாரித்துக் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இதன் நிமித்தமான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்றும் ஆனால் இதைப் பின்பற்றுவது மாநில அரசுகளின் முடிவாக இருக்கும் என்றும் தெரிகிறது.

கடந்த 2020 மார்ச் மாதம் முதல் 2022 ஜனவரி வரை பள்ளிகள் பல மாதங்கள் தொடர்ச்சியாக மூடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் வகுப்புகளும், அவ்வப்போது நேரடி வகுப்புகளும் நடைபெற்றாலும் ஒரு கல்வி ஆண்டாக முழுமையாக பள்ளிகள் செயல்படாதது மாணவர் சமுதாயத்துக்கு பேரிழப்பு எனக் கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x