Published : 27 Jan 2022 06:06 PM
Last Updated : 27 Jan 2022 06:06 PM
தண்ணீருக்காக தன்னந்தனியாக சுரங்கம் வெட்டி, தரிசு நிலத்தை மரப் பண்ணையாக மாற்றிய கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயி அமை மகாலிங்க நாயக் பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ளார். உத்வேகமூட்டும் இவரது வாழ்க்கைக் கதையை சற்றே விரிவாகப் பார்ப்போம்.
கடந்த ஆண்டு பத்ம விருது பெற்றவர்களில் கோவையைச் சேர்ந்த 106 வயதான மூதாட்டி பாப்பம்மாள். தள்ளாத வயதிலும் விவசாயம் செய்து இயற்கையான உணவு என ஆரோக்கியமான முறையில் வாழ்ந்து வருகிறார் பாப்பம்மாள். விவசாயத்தில் பெரும் ஆர்வம் கொண்ட மூதாட்டி பாப்பம்மாளை கௌரவிக்கும் விதமாக பத்ம விருது வழங்கப்பட்டது. மூதாட்டி பாப்பம்மாளை போல இந்த ஆண்டும் விவசாயத்தை நேசிக்கும் ஒருவருக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தரிசு நிலத்தை ஆர்கானிக் மரப் பண்ணையாக மாற்றிய கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயி அமை மகாலிங்க நாயக் தான் இந்தியாவின் உயரிய அங்கீகாரமான பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
அமை மகாலிங்க நாயக் யார்? - கர்நாடக விவசாயிகள் மத்தியில் பிரபலமாக அறியப்படுபவர் அமை மகாலிங்க நாயக், 'அதிசய மனிதன்', 'அற்புத மனிதன்', 'சுரங்க மனிதன்', 'சிங்கிள் மென் ஆர்மி' எனப் பல புனைப்பெயர்களால் அங்கு அழைக்கப்பட்டுவருகிறார். 70 வயதான நாயக், மங்களூருவில் இருந்து 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அட்யநாடுகா அருகே உள்ள கேபு (Kepu) என்ற சிறிய கிராமத்தில் வசித்து வருகிறார். முறையான கல்வியறிவு பெறாத நாயக், விவசாய பண்ணைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர். மஹாபாலா பாட் என்ற உள்ளூர் நிலக்கிழாரின் பண்ணையில் பாக்கு மற்றும் தென்னை மரம் ஏறும் தொழிலாளியாக 1970-களில் பணிபுரிந்துவந்தார்.
அப்போது, விவசாயத்தில் நாயக் காட்டிய ஈடுபாட்டை கண்டு, நிலக்கிழார் மஹாபாலா பாட் தன்னிடம் இருந்த ஒரு தரிசு நிலத்தை 1978-ல் அவருக்கு தானமாக கொடுத்துள்ளார். பாக்கு மர வளர்ப்பில் கைதேர்ந்த நாயக், தனக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தில் பாக்கு மர சாகுபடி செய்ய விரும்பினார். ஆனால், அந்த தரிசு நிலத்தில் தண்ணீர் இல்லாதது விவசாயத்தில் அவருக்கு கடினத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அந்த நிலம் மலைப்பகுதிக்கு அருகில்தான் இருந்துள்ளது.
அருகில் உள்ள நிலங்கள் தண்ணீர் வசதி பெற்றிருக்க, அங்கிருந்து பாசன வசதி பெறுவதும் இயலாமல் போக தனது நிலத்துக்கு தண்ணீர் கிடைக்கும் வழிகளை ஆராய்ந்தார் நாயக். இறுதியாக, பழங்கால முறைப்படி சுரங்கம் வெட்டி அதன் மூலம் தண்ணீரை நிலத்திற்கு கொண்டு வருவது என்று முடிவெடுத்து பணிகளைத் தொடங்கினார். சுரங்கம் வெட்டும் முடிவை அவர் கூறியதும், அதை கேலி, கிண்டல் செய்தவர்களே அதிகம்.
கேலி, கிண்டல்களால் துவண்டுவிடாத நாயக் சுரங்கம் வெட்டும் பணிகளை ஆரம்பித்தார். பணி ஆட்களை கொண்டு சுரங்கம் வெட்டும் அளவுக்கு வசதி இல்லாததால் தானே தனி மனிதனாக இந்தப் பணியை செய்தார். பகல் நேரங்களில் தனது வழக்கமான மரம் ஏறும் தொழிலை செய்துகொண்டே ஓய்வு கிடைக்கும் நேரங்களில் சுரங்கம் வெட்டினார். தினமும் ஆறுமணி நேரம் வைத்து பகல், இரவு என சுரங்கம் வெட்டிய நாயக்கிற்கு முதலில் ஏமாற்றமே கிடைத்தது. முதலில் ஒரு இடத்தில் 30 மீ வரை தோண்டியும் தண்ணீர் இல்லை என்ற விரக்தியில் அந்த திட்டத்தை கைவிட முடிவெடுத்துள்ளார்.
ஆனால், மீண்டும் ஏதோ புது உத்வேகம் கிடைக்க, மற்றொரு இடத்தில் இரண்டாவது சுரங்கத்தை வெட்டியுள்ளார். இந்த முறை 35 மீ தோண்டியும் நீர் இல்லை. இப்படியாக முதல் நான்கு முயற்சிகளை முடிக்கவே நான்கு வருடங்கள் கடந்துள்ளது. ஐந்தாவது முயற்சியாகவே நிலத்தை தோண்டும் போதுதான் ஓரிடத்தில் ஈரப்பதத்தை கண்டுள்ளார். அது அவரின் இத்தனை ஆண்டுகால முயற்சிக்கு உற்சாகத்தை கொடுக்க அந்த இடத்தில் கிட்டத்தட்ட 315 அடி வரை சுரங்கம் வெட்டி நிலத்துக்கு தண்ணீர் கொண்டுவந்துள்ளார்.
இறுதியாக, அவர் நினைத்தது போல் தரிசு நிலத்தை பொன் விளையும் பூமியாக மாற்றினார். தனக்கு பிடித்த பாக்கு மரங்களை சாகுபடி செய்தார். சுரங்கத்தில் கிடைத்த நீரை சேமிக்க, தரிசு நிலத்தை சமன்படுத்தி ஒரு பெரிய தொட்டியை கட்டி அதில் சேமித்துவருகிறார். நாயக்கின் கடின உழைப்பால் உயிர்ப்பிக்கப்பட்ட தரிசு நிலம், இப்போது பலவிதமான மரங்களையும் கொடிகளையும் கொண்டுள்ளது. தற்போது அவரின் நிலத்தில் 300 பாக்கு மரம், 150 முந்திரி மரம், 75 தென்னை மரம் மற்றும் வாழை பயிர்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
விவசாயத்தின் மீதான இவரின் ஆர்வத்தை கௌரவிக்கும் விதமாக இரண்டு தினங்கள் முன்பு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்தது. இந்த விருது அறிவித்தது கூட அறியாமல், நாயக் தனது நிலத்தில் வழக்கமான பணிகளை செய்துள்ளார். ஒரு பத்திரிகையாளர் அவரை அழைத்து விருது விஷயத்தை சொல்லிய பின்பே அவருக்கு இது தெரியவந்துள்ளது. கர்நாடக மக்கள் சொல்வது போல மலையுச்சியில் வசிக்கும் 'சிங்கிள் மேன் ஆர்மி' என்ற பெருமைக்கு தகுதியானவர் அமை மகாலிங்க நாயக். அவருடைய நம்பிக்கை மற்றும் உறுதியால் மட்டுமே அந்த தரிசு நிலம் தற்போது பசுமையை போர்த்தியது போல் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT