Last Updated : 27 Jan, 2022 08:05 AM

 

Published : 27 Jan 2022 08:05 AM
Last Updated : 27 Jan 2022 08:05 AM

குழந்தையை பார்க்க வந்த மருமகனை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற முயன்ற மாமனார்: கர்நாடக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை

பிரதிநிதித்துவப் படம்

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள சித்ர துர்காவில், பிறந்த குழந்தையை பார்க்க வந்த மருமகனை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற முய‌ன்ற மாமனார் மற்றும் அவரது உறவினர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொச‌ப்பேட்டையை அடுத்துள்ள அரவிந்த் நகரைச் சேர்ந்தவர் மாரப்பா (24). இவர் கடந்த 23-ம் தேதி ஹொசப்பேட்டை காவல் நிலையத்தில் தன் மாமனார் மீது புகார் அளித்தார். அதில், ‘‘அரவிந்த் நகருக்கு அடுத்துள்ள ஜங்கம் காலனியில் வசிக்கும் சரளாவும் (22) நானும் காதலித்தோம். சரளாவின் குடும்பம் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெந்தகொஸ்தே கிறிஸ்தவ சபைக்கு மாறினர்.

சரளாவின் தந்தை வசந்தகுமார் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதை தொடர்ந்து, குடும்பத்தில் இருந்த அனைவரும் ஞானஸ்நானம் பெற்றனர். எங்களது திருமண பேச்சு வார்த்தையின் போது சரளாவின் தந்தை வசந்தகுமார் மதம் மாறினால் தான் தனது மகளை திருமணம் செய்து தருவதாக கூறினார்.

இதையடுத்து, பெந்தகோஸ்தே சபையில் ஞானஸ்நானம் பெற்று, கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி சரளாவை திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு பிறகு நான் பெந்தகொஸ்தே ஆலயத்துக்கு செல்லாமல் மீண்டும் இந்து கடவுள்களை வணங்கி வந்தேன். அப்போது வீட்டுக்கு வந்த என் மாமனார் வசந்தகுமார், வீட்டில் இருந்த இந்து கடவுள்களின் புகைப்படங்களைஅகற்றி, இனி இந்து கடவுள்களை வணங்க கூடாது என அறிவுறுத்தினார்.

கடந்த டிசம்பர் 2-ம் தேதி என் மனைவி சரளா பிரசவத்துக்காக தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றார். கடந்த 18-ம் தேதி குழந்தை பிறந்ததாக தகவல் அறிந்து, குழந்தையையும் மனைவியையும் பார்க்க சென்றேன். அப்போது என் மாமனார் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் தான் குழந்தையை பார்க்க அனுமதிப்பேன் எனக் கூறிவிட்டார்.

இதுதொடர்பாக எங்கள் இருவருக்கும் வாக்குவாதம் எழுந்த போது என் மாமனார் வசந்தகுமார், அவரது தந்தை ராமச்சந்திரப்பா, மாமியார் லட்சுமி, உறவினர்கள் மஞ்சுநாத், ஷங்கரப்பா, சுதாகர் உள்ளிட்டோர் என்னை தாக்கினர். மேலும் 3 மாதத்துக்குள் பெந்தகொஸ்தே கிறிஸ்தவ சபைக்கு வரவில்லை என்றால், என்னை விவாகரத்து செய்து விடுவதாகவும் எச்சரித்தனர்'' எனக் கூறியுள்ளார்.

இதை விசாரித்த ஹொசப் பேட்டை போலீஸார் வசந்தகுமார், ராமசந்திரப்பா, லட்சுமி, மஞ்சுநாத், ஷங்கரப்பா, சுதாகர் உள்ளிட்ட 6 பேர் மீது மதமாற்ற தடை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மஞ்சுநாத், ஷங்கரப்பா, சுதாகர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x