Published : 27 Jan 2022 07:56 AM
Last Updated : 27 Jan 2022 07:56 AM
அமராவதி: ஆந்திராவில் தற்போது 13 மாவட்டங்கள் உள்ளன. இவற்றை மக்களவைத் தொகுதிகளின் அடிப் படையில் 26 மாவட்டங்களாக உருவாக்க ஜெகன் மோகன் தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதன்படி அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு புதிய மாவட்டங்கள் மற்றும் அவற்றின் எல்லைகள் தொடர்பான அறிவிப்பை ஆந்திர அரசு நேற்று வெளியிட்டது.
இதன்படி ஆந்திராவில், ஸ்ரீகாகுளம், மன்யம் , விஜயநகரம், அல்லூரி சீதாராம ராஜு, விசாகப்பட்டினம், அனகாபள்ளி, காக்கிநாடா, கோனசீமா, ராஜ மகேந்திர வரம், பீமவரம், ஏலூரு, கிருஷ்ணா, விஜயவாடா, குண்டூர், பல்நாடு, பாபட்லா, நெல்லூர், கர்னூல், நந்தியாலா, அனந்தபுரம், புட்டபர்த்தி, கடப்பா, ராயசோட்டி, சித்தூர், திருப்பதி (ஸ்ரீபாலாஜி) என மொத்தம் 26 மாவட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்.
இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் கருத்துகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இதன் அடிப்படையில் இறுதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, உகாதி பண்டிகை முதல் புதிய மாவட்டங்கள் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாக திருப்பதி உதயமா கிறது. இதற்கு ஸ்ரீபாலாஜி மாவட்டம் என பெருமாளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் திருப்பதி, சந்திரகிரி, ஸ்ரீகாளஹஸ்தி, வெங்கடகிரி, சூளுர் பேட்டை, நாயுடு பேட்டை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற உள்ளன.
பூகோள ரீதியாக முதலில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா தனியாக பிரிந்தது. அப்போது கர்னூல் தலைநகரமாக அமைக்கப் பட்டது. இந்த தருணத்தில், மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடக எல்லையில் உள்ள சில பகுதிகள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன. ஏற்கெனவே இணைய மாட்டோம் என அடம் பிடித்த தெலங்கானாவும் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. இதனால் 294 தொகுதிகளுடன் தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் 1956-ல் உருவானது.
இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தில் இருந்து 2014-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி தனி தெலங்கானா மாநிலம் உருவானது. ஹைதராபாத்துடன் தெலங்கானா பிரிக்கப்பட்டதால், ஆந்திராவுக்கு புதிய தலைநகரமாக அமராவதி நகரம் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2019-ல் ஜெகன் தலைமையில் ஆட்சி ஏற்பட்ட பிறகு ஆந்திராவுக்கு 3 தலை நகரங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர் போராட்டத்தால் அந்த அறிவிப்பை முதல்வர் ஜெகன் வாபஸ் பெற்றார். இந்நிலையில் புதிதாக 13 மாவட்டங்கள் உருவாக் கும் அறிவிப்பை ஜெகன் அரசு வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT