Published : 26 Jan 2022 09:29 PM
Last Updated : 26 Jan 2022 09:29 PM
பிஹாரில் ரயில்வே தேர்வு முறையைக் கண்டித்து மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள். இன்று ரயில்களுக்கு தீ வைப்புச் சம்பவத்திலும் ஈடுபட்டனர்.
பிரச்சினைக்குக் காரணம் என்ன? ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான தேர்வு முடிவுகள் (RRB-NTPC) 2021 கடந்த ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகின. 35,000 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வில், 1.25 கோடி பேர் விண்ணப்பித்தனர். இந்த வேலைக்கான சம்பளம் ரூ.19,900ல் இருந்து ரூ.35,400 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு தேர்வு தான் என்று நினைத்திருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், இரண்டாம் நிலை தேர்வும் இருக்கிறது என ரயில்வே வாரியம் அறிவித்தது. இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் ரயில் மறியலில் இறங்கினர். நேற்று முழுவதும் பல்வேறு இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
இன்று ஜெஹானாபாத்தில் மாணவர்கள் பிரதமரின் உருவ பொம்மையை எரித்தனர். இன்று பயணிகள் ரயில் ஒன்றின் மீது கல் வீசியும், தீ வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அரசு தேர்வையே ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் குறை தீர்க்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வேண்டுகோள்: மாணவர்கள் சட்டத்தை மீறி வன்முறையில் ஈடுபடக் கூடாது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், "மாணவர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மாணவர்களின் குறைதீர்க்கும் விதமாக ரயில்வே பணிநியமன வாரியத் தலைவரிடம் சிறப்பு மின்னஞ்சல் முகவரி உருவாக்கக் கோரப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் தங்களின் புகார்களைத் தெரிவிக்கலாம். அத்தனைக்கும் தீர்வு காணப்படும்" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், ரயில்வே துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஒழுங்கீனத்தின் உச்சபட்சம். அவ்வாறு செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் வாழ்நாளுக்கும் ரயில்வே தேர்வு எழுத முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT