Published : 26 Jan 2022 04:53 PM
Last Updated : 26 Jan 2022 04:53 PM

சிம்லாவில் கடும் பனிப்பொழிவு: 30 கி.மீ ஜேசிபியில் பயணித்து திருமணம் செய்த மணமகன்

இமாச்சலில் மணமகன் ஒருவர் தனது திருமணத்துக்கு ஜேசிபி இயந்திரத்தில் அழைத்துச் செல்லப்படும் வீடியோ வைரலாகியுள்ளது.

விழாக்களில் கிராண்ட் என்ட்ரி கொடுப்பது என்பது வழக்கமான நிகழ்வு. அதுவும் இப்போது நடக்கும் திருமணங்களில் மணமக்களின் என்ட்ரிக்கு தனி ரூம் போட்டு யோசிக்காத குறையாக புதுவிதமாக நடத்துகிறார்கள். ஆனால் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மணமகன் ஒருவர் தனது திருமண நிகழ்வுக்கு தனித்துவமான முறையில் வந்துள்ளார்.

சிம்லாவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, கிரிபார் பகுதியின் சங்கரா கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் சங்கரா கிராமத்தில் இருந்து 30 கி.மீ தள்ளியிருக்கும் ரத்வா கிராமத்தில் நடக்கவிருந்தது. திருமணத்தன்று காலை மணமகன் ஊர்வலம் மூலமாக ரத்வா கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சில கி.மீ சென்ற நிலையில் ஊர்வலம் கடும் பனிபொழிவால் தடைபட்டது. சில இடங்களில் பாதை மூடப்பட்டிருந்ததால் அங்கிருந்து மேலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை பார்த்த மணமகனின் தந்தை இரண்டு ஜேசிபி இயந்திரங்களை வரவைத்தார். ஒரு ஜேசிபியில் மணமகனும், மற்ற ஜேசிபியில் மணமகன் குடும்பத்தினரும் பயணம் செய்தனர். சுமார் 30 கி.மீ ஜேசிபியிலேயே பயணம் செய்தஅவர்கள் திருமணத்துக்கு குறித்த நேரத்தில் கிராமத்தை சென்றடைந்தனர்.

அதன்பின் அங்கு திருமண சடங்குகள் அனைத்தும் செய்துவிட்டு அனைவரும் மணமகளுடன் சங்கரா கிராமத்துக்கு திரும்பினர். இந்த வீடியோக்கள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வேடிக்கையான வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கானோர் ரசித்துள்ளனர். கடந்த ஆண்டு, பாகிஸ்தானைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமணத்துக்கு காரில் ஊர்வலம் செய்வதை தவிர்த்து இதேபோல் ஜேசிபியில் சென்றனர். இந்த வீடியோவையும் சிலர் வேடிக்கையாக பதிவிட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x