Published : 26 Jan 2022 08:31 AM
Last Updated : 26 Jan 2022 08:31 AM
புதுடெல்லி: பத்ம பூஷண் விருதை நிராகரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைப் பாராட்டியுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ், அதேவேளையில் சக கட்சிக்காரர் குலாம் நபி ஆசாத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று மத்திய அரசு அறிவித்தது.குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.
அதன்படி புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதை நிராகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குலாம் நபி ஆசாத் குறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சரியான காரியத்தை செய்துள்ளார். அவர் விடுதலை விரும்பி (ஆசாத்) மாற்றவரைப் போல் அடிமையல்ல (குலாம்)" எனப் பதிவிட்டுள்ளார். இந்தியில் குலாம் என்றால் அடிமை என்பது பொருள். ஆசாத் என்றால் விடுதலை. குலாம் நபி ஆசாத்தின் பெயரை வைத்தே வார்த்தைகளில் விளையாடி புத்ததேவை பாராட்டவும், குலாம் நபியை விமர்சிக்கவும் செய்துள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.
Right thing to do. He wants to be Azad not Ghulam. https://t.co/iMWF00S9Ib
— Jairam Ramesh (@Jairam_Ramesh) January 25, 2022
இதற்கு முன்னதாக ஜெய்ராம் ரமேஷ் பி.என்.ஹஸ்கார் என்ற சிவில் சர்வீஸ் அதிகாரி பத்ம விருதை நிராகரித்தது குறித்து ஹஸ்கரே கைப்பட எழுதியிருந்த கடிதம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார்.
"1973 ஜனவரியில், பத்ம விபூஷண் விருதை நிராகரிப்பதாகத் தெரிவித்தார். பி.என்.ஹஸ்கரின் அறிக்கை சிறப்பானது. பின்பற்றத்தக்கது" என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அறிவிக்கப்பட்ட விருதுப் பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகியோருக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டது விமர்சனங்களை ஈர்த்தது. இருவருமே மோடி எதிர்ப்பாளர்கள். அரசை கடுமையாக விமர்சித்தவர்களுக்கு விருது என்று கூறப்பட்டது. இந்நிலையில், பத்ம விருதை நிராகரிக்கிறேன் என மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT