Published : 25 Jan 2022 06:59 PM
Last Updated : 25 Jan 2022 06:59 PM
புதுடெல்லி: நாட்டின் 73-வது குடியரசு தின விழா, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் ‘அமிர்தப் பெருவிழா‘வாகக் கொண்டாடப்படும் வேளையில், இந்த ஆண்டு குடியரசு தின விழாக் கொண்டாட்டம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனைக் குறிக்கும் வகையில், நாளை ராஜபாதையில் நடைபெற உள்ள பிரதான அணிவகுப்பு மற்றும் 29 ஜனவரியன்று விஜய் சவுக்கில் நடைறெவுள்ள ‘பாசறை திரும்புதல்‘ நிகழ்ச்சிகளின்போது பாதுகாப்பு அமைச்சகம், பல்வேறு புதிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, ஆண்டுதோறும் இனி, ஜனவரி 23-30 வரை ஒரு வார காலத்திற்கு, குடியரசு தினத்தைக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான ஜனவரி 23-ந் தேதி தொடங்கும் இந்தக் கொண்டாட்டங்கள், தியாகிகள் தினமான ஜனவரி 30-ந் தேதி நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை - ஜன.26-ல் நடைபெறும் நிகழ்வுகள்:
* தேசிய மாணவர் படையினரின் (என்.சி.சி.) ‘தியாகிகளுக்கு நூற்றுக்கணக்கான வணக்கங்கள்‘.
* இந்திய விமானப் படையின் 75 விமானங்கள்/ ஹெலிகாப்டர்கள் பங்கேற்கும் கண்கவர் வான் அணிவகுப்பு.
* வந்தே பாரதம் நடனப் போட்டி மூலம் நாடு முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட 480 நடனக் கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள்.
*‘காலா கும்ப் ‘ நிகழ்ச்சியின்போது தயாரிக்கப்பட்ட தலா 75 மீட்டர் உடைய பத்து சுருள்களின் காட்சி.
* பார்வையாளர்களின் வசதிக்காக 10 பிரம்மாண்ட எல்இடி திரைகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், முதன்முதலாக மேற்கொள்ளப்பட உள்ளன.
* ‘பாசறை திரும்புதல்‘ நிகழ்ச்சியின்போது, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 1,000 ட்ரோன்களின் சாகசத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அணிவகுப்பு நேரம் மாற்றம்: ராஜபாதையில் வழக்கமாக காலை 10 மணிக்குத் தொடங்கும் அணிவகுப்பு, பார்வையாளர்கள் தெளிவாகக் காண்பதற்கு ஏதுவாக, இம்முறை காலை மணி 10.30 மணிக்குத் தொடங்கும்.
சிறந்த அலங்கார ஊர்தியை தேந்தெடுக்கும் பார்வையாளர்கள்: கரோனா தொற்றுப் பரவலைக் கருத்திற்கொண்டு, பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டிருப்பதோடு, அணிவகுப்பில் பங்கேற்கும் சிறந்த அலங்கார ஊர்தியை பார்வையாளர்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT