Published : 24 Jan 2022 05:23 PM
Last Updated : 24 Jan 2022 05:23 PM
புதுடெல்லி: நேதாஜியிடமிருந்து ஊக்கத்தை பெற்று நாட்டின் கடமைப் பாதையில் இளைஞர்கள் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:
சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழா கொண்டாடும் முக்கியமான தருணத்தில் இவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த காலத்திலிருந்து வலிமையைப் பெற்று அமிர்த காலமான வரும் 25 ஆண்டுகளில் மகத்தான விளைவுகளை உருவாக்க அர்ப்பணிப்பதற்கான தருணம் இது. விடுதலைப் போராட்டத்தின் புகழ் மிக்க வரலாற்றையும் பீர்பால கனக்லதா பருவா, குதிராம் போஸ், ராணி கைடிநீலு ஆகியோரின் பங்களிப்பையும் நினைவு கூர்கிறேன்.
இளம் வயதிலேயே இந்த வீரர்கள் நாட்டின் சுதந்திரத்திற்கான இயக்கத்தில் ஈடுபட்டு அதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.
கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது ஜம்மு-காஷ்மீரின் நவ்ஷேரா பகுதிக்குப் பயணம் செய்ததையும் சுதந்திரத்திற்குப் பிந்தைய போரின் போது சிறார் வீரர்களாக பங்களிப்பு செய்த பல்தேவ் சிங், பசந்த் சிங் ஆகியோர் தங்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் அந்த இளம் வயது ராணுவத்திற்கு அவர்கள் உதவி செய்தனர்.
குரு கோவிந்த் சிங்கின் புதல்வர்கள் கொண்டிருந்த வீரத்தையும், செய்த தியாகத்தையும் உதாரணங்களாக கொள்வோம். மிகுந்த துணிச்சலுடன் இந்தப் புதல்வர்கள் தியாகம் செய்தபோது அவர்களின் வயது மிகவும் இளையது . இந்தியாவின் நாகரீகம், கலாச்சாரம், ஆன்மீகம், சமயத்திற்கு அவர்களின் தியாகம் ஒப்பில்லாதது.
டெல்லியில் இந்தியாவின் நுழைவாயில் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் டிஜிட்டல் வடிவிலான உருவச்சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. தேசத்திற்கான கடமை என்பதில் நேதாஜியிடமிருந்து மிகப் பெரும் ஊக்கத்தை நாம் பெற்றிருக்கிறோம். நேதாஜியிடமிருந்து இந்த ஊக்கத்தை எடுத்துக் கொண்டு நாட்டின் கடமைப் பாதையில் நீங்கள் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும்.
எந்தத் துறையும், கொள்கைகளும், முன்முயற்சிகளும் இளைஞர்களை மையப்படுத்தி உள்ளன. தொடங்குக இந்தியா, நிமிர்ந்து நில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் உற்பத்தி ஆகியவற்றுடன் தற்சார்பு இந்தியாவின் மக்கள் இயக்கம் நவீன கட்டமைப்புகள் உருவாக்கம் போன்ற முன்முயற்சிகள் இதற்கு எடுத்துக்காட்டு.
இந்தியாவிலும், வெளிநாட்டிலும் புதிய சகாப்தத்தில் தலைமை தாங்குவதற்கு இந்திய இளைஞர்களின் வேகம் பொருத்தமாக உள்ளது. புதிய கண்டுபிடிப்பு மற்றும் புதிய தொழில்கள் துறையில் இந்தியாவின் சக்தி அதிகரித்து வருகிறது. இன்று புதிய தொழில்கள் உலகத்தில் இந்தியாவின் இளைஞர்கள் சிறந்து விளங்குவதைக் காணும் போது நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவின் இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதால் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
நாட்டின் புதல்விகள் முற்காலத்தில் அனுமதிக்கப்படாத துறைகளிலும் கூட இன்று சிறப்பாக பணியாற்றுகிறார்கள். புதிய கண்டுபிடிப்பிலிருந்து பின்வாங்காத புதிய இந்தியா இது. துணிவும், உறுதியும் இன்றைய இந்தியாவின் அடையாளங்களாகும்.
ஜனவரி 3-லிருந்து வெறும் 20 நாட்களில் 40 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். உள்ளூர் பொருட்களை ஆதரிக்கும் தூதர்களாக இருக்குமாறும், தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு தலைமை தாங்குமாறும் இளைஞர்களை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment