Published : 23 Jan 2022 08:03 PM
Last Updated : 23 Jan 2022 08:03 PM
கொல்கத்தா: நேதாஜி தொடர்பான கோப்புகளை முழுமையாக மத்திய அரசு எப்போது வெளியிடும் என்றும், ஜப்பானில் உள்ள அவரது அஸ்தி எனக் கூறப்படும் பொருளை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை ஒட்டி, மின் ஒளி வடிவிலான அவரது பிரமாண்ட சிலை இந்தியா கேட்டில் திறக்கப்பட்டுள்ளது.
இந்தத் தருணத்தில் மம்தா பானர்ஜி நேதாஜி மர்ம மரணம் தொடர்பான கோப்புகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "இன்றுவரை நேதாஜிக்கு என்னவாயிற்று என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை. மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு முன்னதாக, எல்லா கோப்புகளையும் வெளியிடுவோம் என்றனர். மாநில அரசு சார்பில் எங்களிடமிருந்த ஆவணங்களை நாங்கள் வெளிப்படையாக ஆவணப்படுத்தினோ. நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மம் நீடிப்பது மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம்.
2017 ஆம் ஆண்டு ஆர்டிஐ கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய அரசு நேதாஜி விமான விபத்தில் இறந்ததாகவே கூறுகிறது. ஆனால், இன்னும் இங்கு நிறைய பேர் நேதாஜி அரசாங்கம் சொல்வது போல் 1945 ஆம் ஆண்டு தைபேவில் நடந்த விமான விபத்தில் இறக்கவில்லை என்றே நம்புகின்றனர்" என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு 2016ல் வெளியிட்ட 25 கோப்புகளில் 5 பிரதமர் அலுவலகத்தைச் சார்ந்தது, 15 உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்தது. அத்தனையும் 1956ல் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலானது. ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்பதை விளக்கும் உளவுத் துறை ஆவணங்கள் ஏதும் வெளியாகவில்லை என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், நேதாஜி தொடர்பான கோப்புகளை முழுமையாக மத்திய அரசு எப்போது வெளியிடும் என்றும், ஜப்பானில் உள்ள அவரது அஸ்தி எனக் கூறப்படும் பொருளை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கெனவே சிலை அமைப்பதே வெறும் அரசியல், மேற்குவங்க மாநில அலங்கார ஊர்தியை நிராகரித்ததை சமாளிக்க மேற்கொள்ளும் நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT