Published : 23 Jan 2022 03:28 PM
Last Updated : 23 Jan 2022 03:28 PM
பனாஜி: சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள கோவா மாநிலத்தின் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கட்சித் தாவ மாட்டோம் எனக் கூறி உறுதிமொழி எடுத்துள்ளனர்.
கோவா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. 40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டப்பேரவையைக் கைப்பற்ற காங்கிரஸ் கடும் பிரயத்தனம் செய்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் கட்சித் தாவ மாட்டோம் எனக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர்.
LIVE: All Congress Candidates take pledge that they will remain loyal to the electorate & party and will not defect. #PledgeOfLoyalty https://t.co/wlO5SP4Ht2
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் கோவாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 17 எம்.எல்.ஏ.,க்களில் 15 பேர் பாஜகவுக்கு தாவினர். இதனாலேயே காங்கிரஸ் இம்முறை வேட்பாளர்களிடம் வாக்குறுதி பெற்றுள்ளது.
பம்போலிம் பகுதியில் உள்ள மகாலட்சுமி கோயில் முதல் ஹம்ஸா ஷா தர்கா வரையிலும் வேட்பாளர்களை அழைத்துச் சென்று உறுதிமொழி எடுக்கச் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை கோவா காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
கோவா காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் திகம்பர் காமத், "மக்கள் மனங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் சிறு சந்தேகம் கூட எழக்கூடாது என்பதற்காகவே இதைச் செய்கிறோம். சில அரசியல் கட்சிகள் எங்கள் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க முயற்சிக்கின்றனர். அவர்களை நாங்கள் பாதுகாக்க வேண்டியுள்ளது" என்று கூறினார்.
ப.சிதம்பரம் எச்சரிக்கை: இதற்கிடையில் கோவா மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் யாராக இருந்தாலும் ஒருபோதும் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள். கோவா காங்கிரஸ் சார்பில் இதுவரை 36 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடைசியாக 37வது வேட்பாளரும் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT