Published : 22 Jan 2022 08:03 AM
Last Updated : 22 Jan 2022 08:03 AM
புதுடெல்லி: பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையாதது ஏன் என்பது குறித்து பிரியங்கா காந்தி மனம் திறந்த பேட்டியளித்துள்ளார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக தேர்தல் உத்தி செயற்பாட்டாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் எனப் பேசப்பட்டது. ஆனால், பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவது சாத்தியமாகவில்லை.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு 5 மாநிலத் தேர்தல் குறித்து மனம் திறந்த பேட்டியளித்துள்ள பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பிரசாந்த் கிஷோர் இணையாதது குறித்தும் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது: பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் உண்மை தான். ஆனால், எங்கள் பகுதியிலும் சில கெடுபிடிகள், அவர் தரப்பிலும் சில பிடிவாதங்கள். இதனால் அந்த இணைப்பு சாத்தியப்படாமல் போனது என்று கூறினார்.
முன்னதாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி மற்றும் உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை தனித்தனியாக சந்தித்தார். ஆனால், இந்த சந்திப்பு சுமுகமான முடிவுடன் நிறைவு பெறவில்லை. ராகுல் காந்தியுடனான சந்திப்புக்குப் பின்னர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியை பகிரங்கமாக ட்விட்டரில் விமர்சித்தது பேசு பொருளானது. அவர் தனது ட்விட்டரில், "எந்த சிந்தாந்தத்திற்காக, கொள்கைக்காக காங்கிரஸ் தற்போது களத்தில் நிற்கிறதோ அது ஒரு வலிமையான எதிர்க்கட்சிக்கு மிகவும் முக்கியமானது.
இதில் எந்தமாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அதே சமயத்தில், அந்தக் கட்சியின் தலைமைப் பதவிக்கு வருபவரை ஜனநாயக முறைப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதும்அவசியம். காங்கிரஸ் தலைமைப் பதவி என்பது ஒரு தனிநபருக்கான உரிமை கிடையாது. அதுவும், கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 90 சதவீதம் தேர்தல்களில் தோல்வியைடந்த ஒரு கட்சியில் இவ்வாறு நடக்கக் கூடாது" எனக் கூறியிருந்தார்.
இதனால், பிகே என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவது வெறும் பேச்சுவார்த்தையுடன் நின்றது. கடந்த 2017ல் உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ், சமாஜ்வாதிக்கு தேர்தல் உத்தி வகுத்துக் கொடுத்தார். ஆனால் அந்தத் தேர்தலில் இக்கூட்டணி படுதோல்வி அடைந்தது.
அதே வேளையில் பஞ்சாபில் காங்கிரஸ் வென்றது. அமரீந்தர் சிங், காங்கிரஸ் வெற்றிக்கு பிகே பேருதவியாக இருந்ததாகக் கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT