Published : 21 Jan 2022 04:49 PM
Last Updated : 21 Jan 2022 04:49 PM

உ.பி. தேர்தலில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் - 'டீசர்' பாணியில் பிரியங்கா காந்தி தகவல்

லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு பிரியங்கா காந்தி 'டீசர்' பாணியில் பதிலளித்திருப்பது கவனிக்க வைத்துள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது காங்கிரஸ். பிரியங்கா தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் நிலையில் இன்று இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தியிடம், காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

புன்னகையுடன் இதற்கு பதிலளித்த பிரியங்கா, "உத்தரப் பிரதேச காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேறு யாருடைய முகமேனும் உங்களுக்கு தென்படுகிறதா... பிறகு என்ன?" என்று பதிலளித்தார். தொடர்ந்து 'அப்படியானால் நீங்கள்தான் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளரா' என்று மீண்டும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு, "ஒவ்வொரு இடத்திலும் என்னுடைய முகம் இருப்பதனை நீங்கள் காணலாம்" என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்திதான் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் என்பதற்கான சூசகமாக பதிலாகவும், அவர் தேர்தலில் போட்டியிடலாம் என்பதற்கான பதிலாகவும் இது பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால், நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் முதல்முறையாக ஒரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்குவதாக அது அமையும். மேலும், உத்தரப் பிரதேசத்தில் மும்முனை போட்டியை அது உருவாக்கும். ஏற்கெனவே, முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதேபோல் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்த செய்தியாளர் சந்திப்பின்போது ராகுல் காந்தியும் உடன் இருந்தார். தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய ராகுல், "எங்களின் தேர்தல் அறிக்கையில் இருப்பது வெற்று வாக்குறுதிகள் கிடையாது. இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை என்பது உத்தரப் பிரதேச தேர்தலில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்காக இது வெளியிடப்படுகிறது. நாங்கள் வெறுப்பை விதைக்கப்போவதில்லை. மாறாக, மக்களை ஒன்றிணைக்கப் போகிறோம். இளைஞர்களின் வலிமையை கொண்டு புதிய உத்தரப் பிரதேசத்தை கட்டமைக்க விரும்புகிறோம்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x