Published : 21 Jan 2022 03:46 PM
Last Updated : 21 Jan 2022 03:46 PM
புதுடெல்லி: அமர்ஜவான் ஜோதி விவகாரத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன, அமர்ஜவான் ஜோதியில் உள்ள விளக்கு அணைக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா கேட், சர் எட்வின் லூட்டியன்ஸ் வடிவமைத்தது. கடந்த 1931 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி லார்ட் இர்வினால் இது திறந்து வைக்கப்பட்டது. 1914 முதல் 1921 வரை முதல் உலகப்போரில் வீர மரணம் அடைந்த 70000 வீரர்களை நினைவு கூரும் வகையில் இந்தியா கேட் அமைக்கப்பட்டது.
பின்னர் 1971 போர் நினைவாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, போரில் உயிர் நீத்த வீரர்கள் நினைவாக இங்கு அமர் ஜவான் ஜோதியை நிறுவினார்.
இப்போது போரின் 50 ஆண்டுகளை கொண்டாடிய நிலையில், அமர் ஜவான் ஜோதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவிடத்தில் ஐக்கியமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து இருந்தார். அவர் கூறுகையில் ‘‘ராணுவ வீரர்களுக்காக 50 ஆண்டாக தொடர்ந்து ஒளிர்ந்து வந்த அமர் ஜவான் ஜோதியை மீண்டும் ஒளிரவைப்போம். சிலரால் தேசபக்தியையும், தியாகத்தையும் புரிந்துகொள்ள முடியாது’’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்தநிலையில் அமர் ஜவான் ஜோதி தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அமர் ஜவான் ஜோதி விவகாரத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அமர்ஜவான் ஜோதியில் உள்ள விளக்கு அணைக்கப்படவில்லை. தேசிய போர் நினைவு சின்னத்தில் உள்ள விளக்குடன் இணைக்கப்படுகிறது. 1971ல் நடந்த போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் மட்டும் தான் அமர்ஜவான் ஜோதியில் உள்ளது. மற்ற போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர் அங்கு இல்லை.
சுதந்திரத்திற்கு பிறகு நடந்த போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவு சின்னத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு அஞ்சலி செலுத்துவதே அனைத்து வீரர்களுக்கும் செலுத்தப்படும் உண்மையான அஞ்சலியாகும். கடந்த 70 ஆண்டுகளாக தேசிய போர் நினைவு சின்னம் அமைக்காதவர்கள், வீரமரணம் அடைந்த வீரர்கள் அனைவருக்கும் உண்மையாக அஞ்சலி செலுத்தப்படுவதை கண்டு கண்ணீர் வடிக்கின்றனர்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT