Published : 21 Jan 2022 01:37 PM
Last Updated : 21 Jan 2022 01:37 PM
பனாஜி: கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சியை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அகற்றாவிட்டால், மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி காட்டமாகத் தெரிவித்துள்ளது.
கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த கோவா ஃபார்வர்ட் கட்சி காங்கிரஸுடனும், மகாராஷ்டிராவாடி கோமந்த் கட்சி திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனும் சேர்ந்துள்ளன. ஆதலால், பாஜகவுக்குக் கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் சிவசேனா, என்சிபி கட்சிகள் இணைந்து போட்டியிடுவதால், வாக்கு பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், தேர்தலுக்கு முன், திரிணமூல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸுடன் கூட்டணி வைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால், அதற்கு காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அதிருப்தியுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேர்லைச் சந்திக்கிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''கோவாவில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி குறித்து நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் பேசினோம். இதற்காக கோவா மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் ப.சிதம்பரத்தை கட்சி சார்பில் அணுகினோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார். திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிடப் போகிறது என்றவுடனே காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள், பாஜகவுக்கு எதிரான வாக்குகளை நாங்கள் பிரிக்க முயல்வதாகக் குற்றம் சாட்டின.
ஆனால், பாஜகவுக்கு எதிரான மனநிலையுடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக எங்களுடன் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி கூட்டணி வைத்துள்ளது. ஆனால், பிற கட்சிகள் நாங்கள் வாக்குகளைப் பிரிப்பதாக பிரச்சாரம் செய்து வருகின்றன.
ப.சிதம்பரம் தான் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் நலனுக்கு எதிராக மக்களைத் தவறாக வழிநடத்துகிறார். கோவாவில் கூட்டணி குறித்துப் பேச திரிணமூல் காங்கிரஸ் தன்னை அணுகவில்லை என்று ப.சதிம்பரம் கூறுகிறார். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் துணைத் தலைவர் பவான் வர்மா கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு ப.சிதம்பரம் வீட்டுக்குச் சென்று பேசினார்.
ஆனால், ப.சிதம்பரமோ திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், சிதம்பரம் வீட்டுக்குச் சென்று கூட்டணி குறித்துப் பேசினேன் எனத் தெரிவித்த வர்மா, நமது ஈகோவைத் தள்ளிவைத்து, கோவா மக்களுக்காக ஒன்றுசேர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த மாநிலத்தை ஆள்வதற்கு காங்கிரஸ் கட்சி மக்களிடம் வாய்ப்பு கேட்கிறது. ஆனால், 2017-ம் ஆண்டு தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வந்தது. ஆனால், எம்எல்ஏக்கள் அனைவரையும் தக்கவைக்க முடியவில்லை''.
இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT