Published : 12 Apr 2016 07:46 AM
Last Updated : 12 Apr 2016 07:46 AM
ஹைதராபாத் பாத்த பஸ்தி பகுதியில் உள்ள சாலலாவைச் சேர்ந்த முகமது ஜலாலுதீன் (19) சிறு வயதிலிருந்தே சாகசம் செய்வதில் ஆர்வமாக இருந்தார். இதை அவரது பெற்றோர் கண்டித்த போதும், தொடர்ந்து சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘இந்தியாவின் காட் டேலண்ட்’ எனும் தொலைக் காட்சி நிகழ்ச்சிக்காக ஜலாலுதீன் கடந்த 7-ம் தேதி தீ மூலம் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டார். இதை அவரது நண்பர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அனுப்ப முடிவு செய்திருந்தனர்.
இதனிடையே ஜலாலுதீன் முதலில் தன்னுடைய வாயில் மண்ணெண்ணையை ஊற்றி அதை ஊதி, அதில் நெருப்பை உருவாக் கும் ஸ்டண்ட்டில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து தனது சட்டையில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டு அதைக் கழற்றும் சாகச நிகழ்ச்சியை செய்தார். இதை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தீ மளமளவென வேகமாக பரவியதால், ஜலாலுதீனால் தனது சட்டையை கழற்ற முடியவில்லை. இதனால் தீ உடல் முழுவதும் பரவியது.
இதில் அலறி துடித்த ஜலாலு தீனை அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஜலாலுதீன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாத்த பஸ்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT