Published : 21 Jan 2022 11:37 AM
Last Updated : 21 Jan 2022 11:37 AM
புதுடெல்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் 3-வது அலையில், ஏராளமான உயிரிழப்புகளை தடுப்பூசிகள் தடுத்துள்ளன. மக்கள் அதிகமான அளவில், ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டதே காரணம் என்று நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்தார்.
நாட்டில் கரோனா வைரஸ் மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ளது. நாளுக்கு நாள் கரோனாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரி்த்து லட்சக்கணக்கில் இருந்து வருகிறது. மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதால், கரோனா 3-வது அலையின் தாக்கம் பெரிதாக இல்லை. இதுவரை கரோனா 3-வது அலை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்காத மத்திய அரசு நேற்று முதல்முறையாக 3-வது அலை என அறிவித்தது.
மத்திய சுகாதாரத்துறை சார்பில் வாராந்திர பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று டெல்லியில் நடந்தது. இதில் நிதிஆயோக்கின் சுகாதாரக்குழு உறுப்பினர் வி.கே.பால், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் நிதிஆயோக் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் பேசியதாவது:
நாட்டில் கரோனா 3-வது அலை அதிகரித்து வருகிறது. மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதால், கரோனாவில் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இன்னும் 6.50 கோடி மக்கள் 2-வது டோஸ்தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.
கரோனாவுக்கு எதிராக உயிரிழப்பு குறைந்துவிட்டது என்பதற்காக பெருந்தொற்றுக்கு எதிரான நமது போரை நாம் கைவிட்டுவிடக்கூடாது. யாரெல்லாம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புண்டு
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், கேரளா, உத்தரப்பிரதேசம், மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த வாரஇறுதியில் நாட்டில் ஜனவரி 19 வரை 515 மாவட்டங்களில் கரோனா பாசிட்டிவ் 5 சதவீதத்துக்கும் மேல் இருக்கிறது” எனத் தெரிவித்தார்
மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கூறுகையில் “ கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி 3,86,452 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர், 3,059 பேர் உயிரிழந்திருந்தார்கள். 31,70,228 பேர் சிகிச்சையில் இருந்தார்கள். அப்போது தடுப்பூசி செலுத்தியவர்கள் வெறும் 2 சதவீதம் பேர்தான்.
ஆனால், 2022, ஜனவரி 20ம் ேததி 3,17,532 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள், ஆனால், உயிரிழப்பு 380 மட்டும்தான், 19,24,051 பேர்தான் சிகிச்சையில் உள்ளனர். இப்போது 72 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதன் மூலம் தடுப்பூசி செலுத்தினால், உயிரிழப்பு பெருமளவு குறைகிறது என்று தெளிவாகத் தெரிகிறது
கடந்த 2020ம் ஆண்டில் ஒட்டுமொத்த கரோனாவில் 10 சதவீதம் பேர், அதில் 0.96 சதவீதம் மட்டுமே 0 முதல் 19வயதுள்ளவர்கள் உயிரிழந்தனர். 2021ல் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் 11 சதவீதம் பேரில் 0.70 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்தனர்.
சிறு குழந்தைகள், பதின்ம் வயதினர் ஆகியோருக்கு பெரும்பாலும் காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு போன்றவை இருக்கும் ஆனால், 5 நாட்களில் சரியாகிவிடும். உடல்வலி, உடற்சோர்வு இருக்கும். 0 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு காய்ச்சல் பெதுவான அறிகுறியாக இருக்கும்
முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியும் மக்களுக்கு சிறப்பாக செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 20 ஆம் தேதிவரை சுகாதாரப்பணியாளர்களில் 63 சதவீதம் பேர், முன்களப்பணியாளர்களில் 58 சதவீதம்பேர், முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தியுள்ளனர். தகுதியுள்ள மூத்த குடிமக்கள் 39 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்தார்
ஐசிஎம்ஆர் அமைப்பின் தலைவர் பல்ராம் பார்கவா பேசுகையில் “ 2021ம் ஆண்டில் 3 ஆயிரம் டெஸ்ட் கிட் வீட்டில் பரிசோதனை செய்ய வாங்கப்பட்ட நிலையில் கடந்த 20 நாட்களில் 2 லட்சம் பரிசோதனை கிட்கள் வாங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT