Published : 21 Jan 2022 08:53 AM
Last Updated : 21 Jan 2022 08:53 AM

5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை: புதிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி: 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை எனக் குறிப்பிட்டு மத்திய அரசு புதிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், மத்திய அரசு சார்பில்பெருந்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போதைய சூழலுக்கு பொருந்தும் வகையிலான கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

5 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை. 6 முதல் 11 வயதுள்ளோர் பெற்றோரின் நேரடி கண்காணிப்பில் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் இது பொருந்தும்.

அதே போல் 18 வயது மற்றும் அதற்குக் கீழ் உள்ள வயதுடையோர் கரோனாவால் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கு வைரஸ் எதிர்ப்பு அல்லது மோனோக்ளோனல் ஆன்டிபாடிக்களைக் கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்து பயன்படுத்த நேரிட்டால் அதனை, அது 10 முதல் 14 நாட்களுக்கு மேல் வழங்கப்படக் கூடாது. ஸ்டீராய்டுகளை சரியான அளவில் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அறிகுறிகளற்ற குறைந்த அளவில் பாதிப்பு உடையோருக்கு ஸ்டீராய்டு மருந்து செலுத்துவது ஆபத்தை ஏற்படுத்தும். பூஞ்சை காளான் பாதிப்பை ஏற்படுத்தும்.

கரோனா அறிகுறிகள் இருந்தாலும் கூட 5 முதல் 7 நாட்களுக்கு ஸ்டீராய்டு மருந்து செலுத்த அவசியமில்லை.

இதுவரை நாடு முழுவதும் இருந்து வரும் தகவலின் அடிப்படையில், ஒமைக்ரான் நோய்த் தாக்கம் குறைவாக இருந்தாலும் கூட நாம் அதனைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

கரோனா வைரஸ் தாக்கம் என்பதால் அதில் ஆன்டி மைக்ரோபியல்ஸுக்கு நோய் ஒழிப்பில் எந்த உபயோகமும் இல்லை.

அறிகுறிகளற்ற தொற்று கொண்ட குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்தான உணவு, மனநல ஆலோசனையுடன் உரிய மருந்துகளை வழங்க வேண்டும். தடுப்பூசிக்கு தகுதியான குழந்தைகள் என்றால், அவர்கள் குணமடைந்த பின்னர் சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x