Published : 20 Jan 2022 05:21 PM
Last Updated : 20 Jan 2022 05:21 PM
லக்னோ: எங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களை பாஜகவினர் சேர்த்து வருகின்றனர், இதனால் எனது சுமையும் குறையும், குடும்ப கட்சி என்ற விமர்சனமும் இல்லாமல்போகும், இதற்காக அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன் என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.
முதல்வர் யோகி அமைச்சரவையிலிருந்த முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்ட மூவர் சமீபத்தில் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக முலாயம்சிங்கின் மருமகளான அபர்னா யாதவை தங்கள் கட்சியில் இணைத்துகொண்டது.
இதன் தொடர்ச்சியாக சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மைத்துனருமான பிரமோத் குப்தாவும் இன்று பாஜகவில் இணைந்தார். முலாயம் சிங் யாதவின் குடும்பத்தைச் சேர்ந்த 2-வது நபர் பாஜகவில் இன்று இணைந்துள்ள நிலையில் இதுபற்றி லக்னோவில் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்ததாவது:
‘‘பாஜக மகிழ்ச்சியாக இருக்கும் என நம்புகிறேன். எங்கள் கட்சியை குடும்ப கட்சி என்று அவர்கள் விமர்சித்து வந்தனர். தொடர்ந்து இதனை பெரிய குற்றச்சாட்டாக முன் வைத்து வந்தனர். குறைந்தபட்சம் அவர்கள் எங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களை தங்கள் கட்சியில் சேர்த்து வருகிறார்கள். எனது சுமையும் குறையும். இதற்காக அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். இதன் மூலம் குடும்ப கட்சி என்ற எங்கள் மீதான விமர்சனம் முடிவுக்கு வரும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT