Published : 20 Jan 2022 02:34 PM
Last Updated : 20 Jan 2022 02:34 PM
பனாஜி : கோவாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் மகனுக்கு சீட் வழங்க மறுத்துவிட்டது.
கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த கோவா ஃபார்வேர்ட கட்சியானது காங்கிரஸுடனும், மகாராஷ்டிராவாடி கோமந்த் கட்சியானது திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனும் சேர்ந்துள்ளன. ஆதலால், பாஜகவுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் சிவசேனா, என்சிபி கட்சிகள் இணைந்து போட்டியிடுவதால், வாக்குகள் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, கோவாவில் பாஜகவை தொடக்கத்திலிருந்து வளர்த்தவர் மனோகர் பாரிக்கர். கோவா மாநிலத்தில் 3 முறை முதல்வராக இருந்தார். கோவாவில் பாஜக என்றாலே மனோகர் பாரிக்கர்தான் என்ற நிலைதான் அவர் காலமாகும் வரை இருந்தது.
கடந்த தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், பாரிக்கர் முதல்வராக நியமிக்கப்பட்டால் பாஜகவுக்கு ஆதரவு தருகிறோம் என எம்ஜிபி, கோவா ஃபார்வேர்ட் கட்சிகள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோவா முதல்வராக பாரிக்கர் பதவியேற்றார்.
ஆதலால் இந்தத் தேர்தலில் பாரிக்கர் மகன் உட்பல் பாரிக்கருக்கு பாஜக சார்பில் சீட் வழங்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. இது தொடர்பாக சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை உட்கர் பாரிக்கர் சந்தித்துப் பேசியிருந்தார். இதனால் உட்கல் பாரிக்கருக்கு பாஜக சார்பில் சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜக சார்பில் இன்று 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் உட்கல் பாரிக்கர் பெயர் எதிலும் இடம்பெறவில்லை.
கோவா முதல்வராக இருக்கும் பிரமோத் சாவந்த் சான்குலிம் தொகுதியிலும், துணை முதல்வராக இருக்கும் மனோகர் அஜ்கனோக்கர் மர்கோவாவிலும் போட்டியிடுகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளாக பனாஜி தொகுதியில் போட்டியிட்டுத்தான் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றார். அந்தத் தொகுதியை உட்பல் பாரிக்கர் கேட்டுள்ளார். ஆனால், அந்தத் தொகுதியை அட்லான்ஸோவுக்கு வழங்கிவிட்டு வேறு தொகுதியில் போட்டியிடுமாறு பாஜக தலைமை கோரியுள்ளது. இதற்கு உட்பல் பாரிக்கர் மறுத்துவி்ட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உட்பல் பாரிக்கருடன் பாஜக சார்பில் பேச்சு நடந்து வருகிறது.
இதற்கிடையே உட்பல் பாரிக்கருக்கு சிவேசனா, என்சிபிஉள்ளிட்ட பாஜகஅல்லாத கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கோவா தேர்தல் களத்தில் புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT