Published : 19 Jan 2022 05:28 PM
Last Updated : 19 Jan 2022 05:28 PM

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதால் 6 மாணவிகளை வகுப்புக்குள் அனுமதிக்காத கல்லூரியால் சர்ச்சை

கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தின் கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிவதால் 6 மாணவிகளை வகுப்புக்குள் அனுமதிக்காதது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது .

உடுப்பி மாவட்டத்தில் அரசு கல்லூரி ஒன்றில்தான் இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் நடந்துள்ளது. தங்களது கல்லூரியின் சீருடை முறையில் வழக்கத்திற்கு மாறாக மாணவிகள் ஹிஜாப் அணிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கல்லூரி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கல்லூரியின் முடிவை எதிர்த்து 6 மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தங்களது மத சுதந்திரம் என்றும், தங்களது அடிப்படை உரிமை என்று மாணவிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

— The Cognate (@TheCognate_) January 17, 2022

சமீபத்தில் கல்லூரியின் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்ட கருத்து கேட்பு கூட்டத்தை கல்லூரி நிர்வாகம் நடத்தியது. இக்கூட்டத்திற்கு உடுப்பி எம்.எல்.ஏ மற்றும் கல்லூரி முதல்வர் ரகுபதி பட் ஆகியயோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தின் முடிவில் கல்லூரி முதல்வர் ரகுபதி பட் பேசும்போது, “கல்லூரியில் பின்பற்றப்படும் சீருடையே அனைவருக்கும் பொதுவானது. இந்த சீருடை பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மாணவிகளுக்கும் பொருந்தும். இது மாணவர் சேர்க்கையின்போதே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கல்லூரி விவகாரங்களில் மதத்தை கொண்டு வரவேண்டாம்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெரும்பாலான பெற்றோர்கள் கல்லூரியின் சீருடையை எதிர்க்கவில்லை. எனவே, ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்ற ஆறு மாணவிகளின் கோரிக்கையை ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை. அவர்களின் பெற்றோர்கள் கல்லூரியின் சீருடையை ஏற்கவில்லை என்றால், மற்றொரு கல்லூரியில் சேர்த்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

கல்லூரியின் இந்த முடிவை ஆறு மாணவிகளின் பெற்றோர்கள் ஏற்கவில்லை. இதில் ஒரு மாணவியின் பெற்றோர், “எங்களது மத வழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியாது. நாங்கள் வேறு கல்லூரியில் சேர்த்து கொள்கிறோம்“ என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குச் சென்றதால், கடந்த சில நாட்களாக தங்களை வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும், இந்த கல்லூரி முஸ்லிம் மாணவர்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், உருது மொழிகளில் பேசவிடாமல் தடுப்பதாகவும் மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், இதனை கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பான சர்ச்சை இந்தியாவில் எழுவது இது முதல் முறை அல்ல . நீதிமன்றங்களும் இது தொடர்பான சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளன.

உதாரணத்துக்கு AIPMT - தேர்வில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி வேண்டி மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ”தேர்வுக்காக நீங்கள் அமர்திருக்கும்போது, நீங்கள் ஹிஜாப் அணியாமல் இருப்பதினால் உங்கள் நம்பிக்கை மறைந்துவிடாது” என்று கருத்து கூறியிருந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x