Published : 06 Apr 2016 04:05 PM
Last Updated : 06 Apr 2016 04:05 PM
ஐபிஎல் போட்டிகளுக்காக மைதானத்தைப் பராமரிக்க, பிட்ச்களை தயார் செய்ய என்று தண்ணீரை விரயம் செய்யலமா? என்று மும்பை உயர் நீதிமன்றம் மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தை கண்டித்துள்ளது.
அதாவது மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பகுதிகள் வறட்சியில் வாடிவரும் நிலையில், உலகின் பணக்கார கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக இவ்வளவு தண்ணீரை செலவு செய்வது எப்படி நியாயம் என்று மும்பை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
இது குறித்த என்.ஜி.ஓ. அமைப்பான லோக்சத்தா இயக்கம் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், மும்பை, புனே, நாக்பூர் ஆகிய மைதானங்களில் நடைபெறும் 19 போட்டிகளுக்காக 60 லட்சம் லிட்டர்கள் தண்ணீர் செலவிடப்படுகிறது. புனே, நாக்பூரில் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது, இந்நிலையில் மக்கள் நலன் முக்கியமா அல்லது ஐபிஎல் நடைபெறுவது முக்கியமா என்ற ரீதியில் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த மனுவின் மீதான விசாரணையின் போது இன்று நீதிபதிகள் வி.எம்.கனடே, மற்றும் எம்.எஸ் கார்னிக் ஆகியோர் கேள்வி எழுப்புகையில், “பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் சங்கங்கள் எப்படி தண்ணீரை இவ்வாறு விரயம் செய்யலாம்? மக்கள் முக்கியமா? அல்லது உங்களது ஐபிஎல் கிரிக்கெட் முக்கியமா? இது கிரிமினல் வேஸ்டேஜ். மகாராஷ்டிரா எப்படி தத்தளிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தண்ணீர் பற்றாக்குறை இல்லாத பிற மாநிலங்களுக்கு ஐபிஎல் போட்டிகளை நீங்கள் மாற்றுவதுதான் நல்லது” என்று கண்டிப்புடன் தெரிவித்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வருவதற்கு முன்பாக மகாராஷ்டிர அரசு, விதர்பா கிரிக்கெட் சங்கம், மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் உள்ளிட்டவர்களிடமிருந்து பதில் கோரியிருந்தது.
அப்போது வான்கடே மைதானத்தில் நடைபெறும் 7 ஐபிஎல் போட்டிகளுக்கு மட்டும் சுமார் 40 லட்சம் லிட்டர்கள் தண்ணீர் பயன்படுத்துவதாக மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவிக்க, அதற்கு கோர்ட் இது “அளவுக்கதிகமானது” என்று பதில் அளித்தது.
மும்பை கிரிக்கெட் சங்க வழக்கறிஞர் மேலும் கூறும்போது, இந்தத் தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாது என்றார்.
இந்நிலையில் மகாராஷ்டிர அரசு இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கிறது என்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை வியாழக்கிழமைக்கு (நாளை) தள்ளி வைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT