Published : 18 Jan 2022 06:38 PM
Last Updated : 18 Jan 2022 06:38 PM
புதுடெல்லி: போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் மதுரா பாஜகவின் முக்கியத் தலைவர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். கொள்கை, நேர்மையை கட்சி இழந்துள்ளதாகவும் அவர் கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளார்.
மதுராவின் முக்கியப் பாஜக தலைவராகக் கருதப்படுபவர் எஸ்.கே.சர்மா. இங்குள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவரான சர்மா, கடந்த 2009 உ.பி சட்டப்பேரவைத் தேர்தல் முதல் பாஜகவில் போட்டியிட முயன்று வருகிறார். ஆனால், இவருக்கு அடுத்த முறை பார்க்கலாம் எனக் கூறி பாஜக, சர்மாவை சமாளித்து வந்துள்ளது. கடைசியாக இந்தமுறை எப்படியும் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் எஸ்.கே.சர்மா. இதற்காக அவர் மதுராவின் மந்த் தொகுதியில் தமக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என பிரச்சாரங்களையும் தொடங்கினார். ஆனால், இந்தமுறையும் பாஜகவால் சர்மாவிற்கு போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது.
கட்சியிலிருந்து விலகல்: மதுராவின் மந்த் தொகுதியில் இளம் வேட்பாளரான ராஜேஷ் சவுத்ரி பெயரை பாஜக நேற்று முன்தினம் அறிவித்தது. இதை எதிர்த்து சர்மாவின் ஆதரவாளர்கள் மதுரா பாஜக அலுவலகம் முன் இரண்டு தினங்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மிகவும் மனம் நொந்த சர்மா, பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இன்றுடன் விலகுவதாக அறிவித்துள்ளார். இத்துடன், கண்ணீர் மல்க செய்தியாளர்களிடமும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களையும் வைத்துள்ளார் சர்மா.
இது குறித்து பாஜகவிலிருந்து விலகிய சர்மா கூறும்போது, ''இதுவரையும் பாஜகவிற்காக செலவிட்டு நான் எனது பல கோடி சொத்துகளை இழந்துள்ளேன். கட்சிப் பணிக்காக எனது தலைவர்கள் எப்போது பணம் கேட்டாலும் மறுக்காமல் அளித்து உதவிய நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். கடந்த 2009 முதல் எனக்கு போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இதற்கு, பாஜக தனது கொள்கையையும், நேர்மையையும் இழந்துவிட்டதுதான் காரணம். இக்கட்சியில் ராமர் பெயரில் பெரும் மோசடிகள் செய்யப்படுகின்றன. இனி இக்கட்சியில் இருந்து எந்தப் பலனும் பொதுமக்களுக்கு அளிக்க முடியாது'' எனத் தெரிவித்தார்.
பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கில் கடந்த 1980 முதல் உறுப்பினராக இருந்தவர் இந்த சர்மா. பிறகு கட்சிப் பணிக்காக பாஜகவில் அவர் இணைக்கப்பட்டுள்ளார். தனது கட்சி விலகலுக்கு பின் சர்மா தனது வீட்டின் முன்பிருந்த பாஜகவின் பெரிய பதாகையயும் கிழித்து அகற்றி உள்ளார். இவரது விலகலால, மதுராவில் பாஜகவிற்கு பின்னடவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT