Published : 18 Jan 2022 02:53 PM
Last Updated : 18 Jan 2022 02:53 PM
சண்டிகர்: ஆம் ஆத்மியின் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவர் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
பிப்ரவரி 20-ம் தேதி பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பஞ்சாப்பில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்புக்கு இன்று விடை கிடைத்துள்ளது. கடந்த 2017-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம், முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலே தேர்தலைச் சந்தித்ததுதான் என்றும் ஒரு பார்வை உள்ளது. ஆனால், இந்த முறை முதல்வர் வேட்பாளர் யார் என்று தற்போதே அறிவித்துள்ளது. கடந்த சில நாட்கள் முன், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மக்களே தேர்வு செய்யும் வகையில் இலவச தொலைபேசி எண்களை அறிவித்திருந்தார் அரவிந்த் கேஜ்ரிவால். அந்த பொது வாக்கெடுப்பின்படி ஆம் ஆத்மியின் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த பகவந்த் மான்? - 48 வயதாகும் பகவந்த் மான் பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்டத்தின் சடோஜ் கிராமத்தில் பிறந்தவர். பஞ்சாப் மக்கள் மத்தியில் ஓர் அரசியல்வாதி என்பதை விட, காமெடி நடிகராக அறியப்படுகிறார் பகவந்த். தனது கல்லூரி பருவத்தில் இருந்தே ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னை மேம்படுத்தி கொண்ட பகவந்த், நிறைய கல்லூரி நிகழ்வுகளில் காமெடி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். நாளைடைவில் அதுவே அவரை டெலிவிஷன் நிகழ்ச்சிகள் வரை கொண்டு சென்றது. பகவந்த்தின் தனிச் சிறப்பு அவரின் அரசியல் நையாண்டி. பஞ்சாப் மற்றும் தேசிய அரசியலின் நடப்பு நிகழ்வுகளை காமெடி கன்டென்ட்டாக மாற்றி மக்கள் முன்னிலையில் நடித்து காண்பிப்பார்.
இந்த பாணி அவரை மக்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்த்தது. சில பட வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்தது. இப்படி புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இருந்தாலும், அரசியல் என்ட்ரி கொடுத்த பிறகு அவர் காமெடியன் பட்டத்தை துறந்து முழு நேர அரசியல்வாதியாக மாறினார். ஆம் ஆத்மி அவரின் முதல் கட்சி கிடையாது. சரியாக, ஒரு தசாப்ததுக்கு முன்னதாக 2011-ல் மன்பிரீத் சிங் பாதல் தலைமையிலான பஞ்சாப் மக்கள் கட்சியில் இணைந்ததன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் பகவந்த்.
அந்தக் கட்சி சார்பில் 2012 சட்டப்பேரவைத் தேர்தலில் லெஹ்ரா தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார். அந்த முறை அவருக்கு தோல்வியே கிடைத்தது. இதன்பின்னரே 2014-ல் பஞ்சாப்பில் புதிய கட்சியாக கால்பதித்த ஆம் ஆத்மியில் இணைந்தார் பகவந்த். கட்சியில் இணைந்த உடன் அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தது ஆம் ஆத்மி. தனது சொந்த தொகுதியான சங்ரூரில் களம் கண்டார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த அகாலிதளத்தின் தலைவரான சுக்தேவ் சிங் திண்ட்சாவை நரேந்திர மோடி அலைக்கு மத்தியிலும் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டினார் பகவந்த். இதே தொகுதியில் 2019 தேர்தலிலும் வென்று மக்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
2014 வெற்றி அவரை ஆம் ஆத்மியில் முக்கிய நபராகவும், கெஜ்ரிவாலின் நம்பிக்கையாகவும் நல்ல நண்பராகவும் ஆக்கியது. 2017 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பகவந்த் தோல்வியை தழுவினாலும், கட்சியில் அவருக்கு இருந்த செல்வாக்கு, கெஜ்ரிவாலின் நல்ல நட்பு ஆகியவை அவருக்கு கைகொடுத்தது. இதனால் 2017 தேர்தலுக்குப் பிறகு, பகவந்த் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அன்றில் இருந்து இன்றுவரை ஆம் ஆத்மியின் பஞ்சாப் முகமாக இருக்கும் பகவந்த், தற்போது முறையாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பகவந்த் மான் மீது ஏராளமான சர்ச்சைகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக மதுப்பழக்கம் அவரை நிறைய கேலிகளை சர்ச்சைகளை சந்திக்க வைத்துள்ளது. பல முறை குடித்துவிட்டு பொதுவெளியில் அவர் தள்ளாடி செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளன. சில ஆண்டுகள் முன் ஆம் ஆத்மியின் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் வைத்து, "இனி மது அருந்த மாட்டேன். பஞ்சாப் மக்களுக்காக உழைக்க இனி எனது நேரத்தை ஒதுக்குவேன்" என்று தனது தாயாரிடம் சத்தியம் செய்தார் பகவந்த்.
இதுமட்டுமல்ல, நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு விஷயங்களை வீடியோ எடுத்த விவகாரம், மனைவியை பிரிந்த விவகாரம் என பகவந்த் மீது சர்ச்சைகள் ஏராளம். இந்த சர்ச்சைகளை தாண்டி கெஜ்ரிவால் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முக்கிய காரணம் அவரின் அரசியல் செயல்பாடுகள். கடந்த சில தேர்தல்களில் பகவந்த் செயல்பாடுகளால் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. சில மாதங்கள் முன் நடந்த சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் பகவந்த்தின் சிறப்பான செயல்திறனால் நகரத்தில் உள்ள 35 வார்டுகளில் 14 வார்டுகளை வென்றது.
மேலும், கட்சியில் அவருக்கு நிறைய செல்வாக்கும் உள்ளது. ஆம் ஆத்மியின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஹர்பால் சீமாவும் கட்சியின் ஒரு முக்கியமான முகமாக இருந்தாலும், அரசியல் ரீதியாக முக்கியமான மால்வா பிராந்தியத்தில், குறிப்பாக கிராமப்புற வாக்காளர்கள் மத்தியில் வலுவான அடித்தளத்தை கொண்டிருப்பவர் பகவந்த் மட்டுமே. இதனால் போட்டியாளர்கள் ஏதுமின்றி, ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக தற்போது பகவந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பகவந்த் மான் மீது ஆம் ஆத்மி அதிக நம்பிக்கை வைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் அசத்தலான உரை நிகழ்த்துவதில் மக்கள் மற்றும் கட்சித் தலைவர்களிடையே பெயர் பெற்ற பகவந்த் ஆம் ஆத்மியின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT