Published : 18 Jan 2022 02:45 PM
Last Updated : 18 Jan 2022 02:45 PM
டெல்லி : ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 விலை வழங்கிட வேண்டும் என மத்திய அரசிற்கு அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இன்று அச்சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில், "அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மத்தியக்குழு கூட்டம் ஹைதராபாத்தில் 12.01.2022 அன்று சுந்தரய்யா பவனில் நடைபெற்றது. உரம், டீசல் உள்ளிட்ட இடு பொருட்களின் விலை உயர்வால் கரும்பு உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசு கரும்புக்கான விலையை உயர்த்த மறுக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு ஒரு குவிண்டால் கரும்புக்கு பதினைந்து ரூபாய் மட்டுமே விலையை உயர்த்தியுள்ளனர். அதேநேரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் கரும்புக்கு மாநில அரசுக்கான விலையைக் கடந்த நான்காண்டுகளாக அறிவிக்கவில்லை. போராட்டத்திற்கு பிறகு பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் பரிந்துரை விலையை (SAP) அறிவித்துள்ளன.
மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசு வருவாய் பங்கீட்டு முறையை மாநிலங்கள் சட்டமாக்கிட வேண்டுமென்று கடிதம் எழுதியதை ஏற்று தமிழ்நாடு, கர்நாடகா அரசுகள் சட்டமாக்கி SAP-ஐ ரத்து செய்துவிட்டனர். கரும்புக்கு விலை நிர்ணயித்திட வருவாய் பங்கீட்டு முறையை சட்டமாக்கிட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு ரத்து செய்திட வேண்டும்.
அதே போல மத்திய அரசு அறிவிக்கும் கரும்புக்கான விலை FRP-ஐ மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு தர சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு பரிந்துரைக்கிறது. இது கரும்பு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும். இந்த ஆலோசனையை மத்திய அரசு கைவிட்டு விட வேண்டும். கரும்பு கட்டுப்பாடு சட்டம் 1966-ன் படி கரும்பு பணத்தை கரும்பு கொள்முதல் செய்த 14 நாட்களில் வழங்கிட வேண்டுமென்பதை உறுதிப்படுத்திட வேண்டும். ஆனால், சர்க்கரை ஆலைகள் சட்டத்தை மதிக்காமல் ஒரு வருடத்திற்கும் மேலாக கரும்புக்கான பணத்தை விவசாயிகளுக்குத் தராமல் அலைய விடுகிறார்கள்.
தற்போது நாடு முழுவதும் 12,000 கோடி ரூபாய் கரும்புக்கான பணம் பாக்கி உள்ளது. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் ரூ.5,000 கோடிக்கு மேல் பாக்கி உள்ளது. நாடு முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகள் பிரச்சினைகளை விவாதித்து AISFF கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
1. 2021-22 ஆண்டுக்கு 9.5 பிழிதிறனுக்கு ரூ.5,000 கரும்புக்கான விலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
2. அனைத்து மாநில அரசுகளும் கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவித்து SAP வழங்கிட வேண்டும்.
3. உரம், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட இடுபொருட்களின் விலையைக் குறைத்து கரும்பு உற்பத்திச் செலவை குறைத்திட வேண்டும்.
4. நாடு முழுவதும் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய கரும்பு பண பாக்கியை முழுமையாக விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பெற்றுத்தர வேண்டும். கரும்புக் கட்டுபாடு சட்டப்படி 14 நாட்களில் விவசாயிகளுக்குப் பணத்தை பெற்றுத் தருவதற்குச் சட்டப்படியான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
5. மூடியிருக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறந்து செயல்படுத்திட வேண்டும். NCLT-க்கு தேசியக் கடன் தீர்ப்பயத்துக்குச் சென்றுவிட்ட தனியார் சர்க்கரை ஆலைகளை (தமிழ்நாட்டில் ஏழு ஆலைகளை உட்பட) அரசு ஏற்று நடத்திட வேண்டும்.
6. சர்க்கரை ஆலைகள் உட்பொருட்கள் உற்பத்தியில் வரும் லாபத்தில் விவசாயிகளுக்குப் பங்கு அளித்திட வேண்டும்.
7. கூட்டுறவு - பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை தனியாரிடம் ஒப்படைத்திடக் கூடாது. கூட்டுறவு - பொதுத்துறை ஆலைகளைப் பாதுகாத்து மேம்படுத்திட மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கிட வேண்டும்.
8. சர்க்கரைத் துறையில் ரங்கராஜன் குழுவின் சிபாரிசுகளை மத்திய அரசு அமுல்படுத்தக் கூடாது.
9. சர்க்கரை ஆலைகளில் இருப்பில் உள்ள சர்க்கரையில் மாதம் பத்து சதவீதம் மட்டுமே விற்பனை செய்து கொள்ளும் கோட்டா முறையை அமல்படுத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும். அதுவரை இருப்பில் உள்ள சர்க்கரையில் மாதம் 25 சதவீதத்தை விற்றுக் கொள்ள சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். கோட்டா முறையை மத்திய அரசு அமல்படுத்துவதால் சர்க்கரையை வங்கிகளில் அடகு வைத்து கூடுதலாக வட்டி, கூட்டு வட்டியை சர்க்கரை ஆலைகள் தேவையின்றி கட்டி வருகின்றன.
10. அனைத்து விளைபொருட்களுக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கிட மத்திய அரசு சட்டம் இயற்றிட வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டுமென்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன" என்று அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT