Published : 17 Jan 2022 07:36 PM
Last Updated : 17 Jan 2022 07:36 PM
புதுடெல்லி: கரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க ரயில் பெட்டிகள், ஏசி பஸ்கள் மற்றும் ஏசி அறைகளில், மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) உருவாக்கிய புறஊதா-சி (யுவி-சி) கதிரியக்கத் தொழில்நுட்பம் பொருத்தப்படுகிறது என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைக் குறைப்பதற்கான தொற்று அழிப்பு தொழில்நுட்பத்தின் சிஎஸ்ஐஆர் வழிகாட்டுதல்களை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று வெளியிட்டு பேசியபோது இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசியவர், "கரோனா தொற்றுப் பரவலைக் குறைப்பதில், சிஎஸ்ஐஆர்-சிஎஸ்ஐஓ மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் உருவாக்கிய யுவி-சி தொழில்நுட்பம் பயனுள்ளதாக உள்ளது.
ரயில் நிலையங்கள், ஏசி பஸ்கள், நாடாளுமன்றம் ஆகியவற்றில் இந்தத் தொழில்நுட்பம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்கள் உபயோகத்திற்காக இந்தத் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. காற்றில் உள்ள கரோனா வைரஸை செயலிழக்கச் செய்யும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் காற்றில் பரவும் இதர கிருமிகளை யுவி-சி தொழில்நுட்பம் செயலிழக்கச் செய்கிறத. இந்தத் தொற்று ஒழிப்பு தொழில்நுட்பத்தைப் பொருத்தினாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கூட்டங்களைத் தவிர்ப்பது போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில், உள் அரங்கு கூட்டங்களில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் படி அறிவுறுத்த வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சிஎஸ்ஐஆர் கடிதம் எழுதவுள்ளது.
ஆடிட்டோரியங்கள், மிகப் பெரிய அரங்குகள், வகுப்பறைகள் மற்றும் வணிக வளாகங்களிலும் இந்த யுவி-சி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொற்றுக்கு எதிரான பாதுகாப்புச் சூழலை உருவாக்க முடியும் என்பதால் இதனை செயல்படுத்த மத்திய அரசு முனைப்புடன் உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.
இதேகூட்டத்தில் பேசிய ரயில்வே வாரிய நிர்வாக இயக்குநர் ஏ கே மல்ஹோத்ரா, "பந்த்ராவிலிருந்து சண்டிகர் செல்லும் ரயில்பெட்டிகளில் இந்த யுவி-சி தொழில்நுட்பம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்படுள்ளது."என்று தெரிவித்துள்ளார். அதேபோல், "உத்தர பிரதேசத்தில் ஏசி பஸ்களில் இந்த யுவி-சி தொழில்நுட்பம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது" என்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணைச் செயலாளர் அமித் வரதன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT