Published : 17 Jan 2022 09:50 AM
Last Updated : 17 Jan 2022 09:50 AM
புதுடெல்லி: திருமண பாலியல் வல்லுறுவு (மேரிட்டல் ரேப்) பிரச்சினையில், மனைவியின் சம்மதம் என்பது இச்சமூகத்தில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட கருத்தாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆர்ஐடி ஃபவுண்டேஷன் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கம் ஆகியன தாக்கல் செய்துள்ள மனு மீதான விசராணை நடைபெற்று வருகிறது. இந்திய பாலியல் பலாத்காரச் சட்டத்தின் கீழ் கணவருக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை ரத்து செய்யுமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
திருமண உறவு என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புனிதமாகக் கருதப்படும் நம் நாட்டில், பெண்கள் மீது ஏவப்படும் வன்முறைகளில் பெரும்பாலானவை திருமணத்தின் பெயராலேயே நடக்கின்றன எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது தனது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது. அதில், கணவன், மனைவியைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவது கிரிமினல் குற்றம் ஆகாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வாறு செய்வதால், திருமணம் என்ற சமூகக் கட்டமைப்பே கேள்விக்குறியாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலைப்பாடு பெண்களின் அடிப்படை உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது எனப் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இது தொடர்பாக ஒரு ட்வீட் செய்திருக்கிறார். அதில், "திருமண பாலியல் வல்லுறுவு (மேரிட்டல் ரேப்) பிரச்சினையில், மனைவியின் சம்மதம் என்பது இச்சமூகத்தில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட கருத்தாக உள்ளது. பெண்ணின் சம்மதத்திற்கு முக்கியத்துவம் அளித்து முன்னிலைப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
#MaritalRape என்ற ஹேஷ்டேகின் கீழ் அவர் இதனைப் பதிவு செய்துள்ளார்.
Consent is amongst the most underrated concepts in our society.
It has to be foregrounded to ensure safety for women. #MaritalRape— Rahul Gandhi (@RahulGandhi) January 16, 2022
உலக அளவில் பல நாடுகளில் குற்றமாக அறிவிக்கப் பட்டிருக்கும் ‘மேரிட்டல் ரேப்’ எனப்படும் திருமண வல்லுறவு இந்தியாவில் இன்னும் குற்றமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தியாவில் எழுபத்தைந்து சதவீதப் பெண்கள், திருமணப் பந்தத்தில் வல்லுறவால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஐநா மக்கள்தொகை நிதியம் தெரிவித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT