Published : 17 Jan 2022 08:05 AM
Last Updated : 17 Jan 2022 08:05 AM

யாரையும் கட்டாயப்படுத்தி கரோனா தடுப்பூசி போட முடியாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம்

புதுடெல்லி: யாரையும் கட்டாயப்படுத்தி கரோனா தடுப்பூசி போடமுடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தடுப்பூசி வழிகாட்டுதல் நெறிமுறைகளில் விருப்பமில்லாமல் யாருக்கும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்துவது பரிந்துரைக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

எவாரா பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்காக வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், தடுப்பூசி சான்றிதழ்களை பொது இடங்களில் காண்பிக்கும் அவசியத்திலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்தது.

இந்த மனு தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

அதில், ஒரு தனிநபரின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக தடுப்பூசியை செலுத்துமாறு இந்திய அரசாங்கமோ, மத்திய சுகாதார அமைச்சகமோ நிர்பந்திக்கவில்லை. கரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மக்கள் நலன் கருதியே தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், பொதுமக்கள் நலன் கருதி தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி பரவலாக விளம்பரங்கள் செய்யப்படுகிறது. அச்சு, எலக்ட்ரானிக் ஊடகம், சமூக வலைதளம் என எல்லாவற்றிலுமே தடுப்பூசி செலுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதை செயல்படுத்த சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், யாருடைய விருப்பத்துக்கு மாறாகவும் தடுப்பூசியை வலுக்கட்டாயமாக செயல்படுத்த முடியாது.

அதேபோல், மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி சான்றிதழை கையோடு எடுத்துச் செல்லுமாறு எவ்வித உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x