Last Updated : 16 Jan, 2022 08:43 AM

1  

Published : 16 Jan 2022 08:43 AM
Last Updated : 16 Jan 2022 08:43 AM

உ.பி. தேர்தலில் அயோத்தி, மதுரா என பேசப்பட்டு வந்த நிலையில் முதல்வர் ஆதித்யநாத் கோரக்பூரில் போட்டியிடுவது ஏன்?- பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலின் முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அயோத்தி அல்லது மதுராவில் போட்டியிடக்கூடும் எனக் கூறப்பட்டு வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் போட்டியிடுகிறார். உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கானப் பாஜகவின் முதல்பட்டியலில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

உ.பி.யில் கடந்த 2017 தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் ஐந்தாவது முறை வெற்றி பெற்று எம்.பியானவர் யோகி ஆதித்யநாத். அவர் கடந்த 1998 முதல் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். ஐந்தாவது முறை வெற்றி பெற்ற ஆதித்யநாத் முதல்வராக அமர்த்தப்பட்டார்.

மேலவை உறுப்பினரான முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார். இதனால் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் போட்டியிடுவார் என ஒரு பகுதி பாஜகவினரும், மதுரா என மற்ற சிலரும் கூறி வந்தனர்.

இதற்கு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதும், மதுரா வின் கியான்வாபி மசூதியை இடித்து கிருஷ்ணர் கோயில் விரிவுபடுத்த வலியுறுத்தப்படுவதும் காரண மானது. ஆனால், எவரும் எதிர் பார்க்காத வகையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரது சொந்த ஊரான கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் தொகுதியில் கோரக்நாத் கோயில் மடம் அமைந்துள்ளது. இம்மடத்தின் பரிந்துரையின் பேரிலேயே பாஜக தன் வேட்பாளரை அறிவிப்பதை வழக்கமாக்கி உள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2002-ல் பாஜக சார்பில் ஷிவ் பிரதாப் சுக்லா போட்டியிட்டார். இவரை எதிர்த்து இந்து மகாசபா சார்பில் போட்டியிட்ட ராதா மோகன் தாஸ் அகர்வால் மாபெரும் வெற்றி பெற்றார். அத்துடன் பாஜகவின் பிரதாப் சுக்லாவை மூன்றாவது இடத்திற்கு தள்ளியிருந்தார். இதன் பின்னர் அடுத்த தேர்தல் முதல் பாஜகவின் வேட்பாளராகி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார் ராதா மோகன். தற்போது இந்த தொகுதியில்தான் அவருக்கு பதிலாக யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பாஜக நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும்போது, ‘‘கடந்த 1967 ஜன சங்கம் காலம் முதல் கோரக்பூரில் பாஜக தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இது அமைந்த கிழக்கு உ.பி.யில் 130 தொகுதிகள் உள்ளன.

இதில், சமீப நாட்களாக பாஜகவின் மீது அதிருப்தி நிலவுகிறது. இதை சமாளிப்பதுடன் பிரச்சாரம் இல்லாமலே ஆதித்ய நாத்தால் வென்று விட முடியும், இதனால் அவர் உத்தர பிரதேசத்தின் மற்ற பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்யலாம் என்பதால் அவர் கோரக்பூரில் போட்டியிடுகிறார்’’ எனக் கூறுகின்றன.

மேல்சபை உறுப்பினரான துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பிரயாக்ராஜின் சிராத்து தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு கேசவ் பிரசாத், 2012-ல் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இவர்களது போட்டியால் உத்தர பிரதேச முன்னாள் முதல்வர்களான சமாஜ்வாதியின் அகிலேஷ் சிங், பகுஜன் சமாஜின் மாயாவதியும் போட்டியிடும் கட்டாயத்திற்கு உள்ளாகி விட்டனர்.

மேலும், இந்த முறை பல எம்எல்ஏக்களுடன், சில கேபினட் அமைச்சர்களும் பாஜகவிலிருந்து வெளியேறி விட்டனர். இதனால், சுமார் 40 சதவிகிதம் எம்எல்ஏக் களுக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்காது எனக் கருதப்பட்டது.

20 சதவீதம் வாய்ப்பு மறுப்பு

ஆனால், பாஜக நேற்று வெளியிட்ட 107 வேட்பாளர்களில் 20 சதவிகிதம் பேர் மட்டுமே மறுபோட்டி வாய்ப்பை இழந்துள்ளனர். இதன் பின்னணியில் அதிருப்தியாளர்கள் எதிர்ப்பு தோல்விக்கு வழிவகுத்து விடும் என்ற அச்சம் கட்சிக்கு இருப்பதே காரணம் எனக் கருதப்படுகிறது.

முதல் கட்ட தேர்தல் நடை பெறும் உ.பி.யின் மேற்கு பகுதி யில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பல தொகுதிகள் உள்ளன. எனினும், இங்கு பாஜக வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் பெயர் கூட இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x