Published : 15 Jan 2022 01:18 PM
Last Updated : 15 Jan 2022 01:18 PM
உத்தரப் பிரதேசம் உள்ளட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 மாநிலங்களில் பாஜக ஆளும் கட்சியாக இருப்பதாலும், நாட்டின் மிக முக்கியமான மாநிலமான உ.பி.யில் தேர்தல் என்பதாலும் பாஜகவுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில், இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் பாஜகவில் இருந்து விலகினார். தொடர்ந்து பாஜகவிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனர்.
பாஜக அரசில் அமைச்சர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா, தரம்சிங் சைனி ஆகியோர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். திடீரென பாஜகவில் இருந்து முன்னணி தலைவர்கள் பலர் விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைவது அம்மாநிலத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் இந்த மாற்றம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பின்னணியாக அம்மாநிலத்தின் வலிமையான சாதி அரசியல் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஆதிக்கம் செலுத்தும் சாதி அரசியல்
உத்தர பிரதேசத்தின் சுமார் 20 கோடி மக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சுமார் 40%; முற்பட்ட வகுப்பினர் 23%; பட்டியல் இனத்தவர் 20%; முஸ்லிம்கள் 19%. முற்பட்ட வகுப்பினரில் பிராமணர்கள் 12%; தாக்கூர்கள் 8%; பிற்படுத்தப்பட்டோரில் யாதவர்கள் 9 % என்ற அளவில் இருக்கலாம் என தெரிகிறது. மாநிலத்தின் மத்தியப் பகுதியில் யாதவர்களும் வடக்கு மத்தியப் பகுதி, கிழக்குப் பகுதிகளில் ராஜபுத்திரர்களும் தாக்கூர்களும் மேற்குப் பகுதியில் ஜாட்டுகள், குஜ்ஜார்களும் கிழக்கில் குர்மிகள், மத்தியப் பகுதியிலும் கிழக்கிலும் மவுரியா, குஷ்வாஹா பிரிவினரும் வசிக்கின்றனர்.
உத்தர பிரதேசத்தில் மட்டும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் 5,013 சாதிப் பிரிவுகள் இருக்கின்றன. இந்தச் சாதிகளுக்குள் நடக்கும் போட்டியே உத்தர பிரதேச அரசியலை நிர்ணயிக்கிறது. தற்போது நடக்கப்போகும் உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலை நிர்ணயிக்கப் போவதும் இந்த சாதிய கணக்கு தான்.
உத்தர பிரதேசத்தில் 90-களுக்குப் பிறகு காங்கிரஸ் கரையத் தொடங்கிய பிறகு இந்த ஜாதி அரசியல் வேறொரு புதிய பரிணமாணத்தை எடுத்தது. பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கை ஓங்கியபோது, சமாஜ்வாதி கட்சியும், தாழ்த்தப்பட்ட மக்கள் மேலெழும்பி வந்தபோது பகுஜன் சமாஜ் கட்சியும் முன்னோக்கி நகர்ந்தன.
அதன் அடிப்படையில் அந்த கட்சிகள் தங்களுக்கு இணைவான மற்ற ஜாதிகளின் வாக்குளை ஒருங்கிணைப்பதன் மூலம் வெற்றியை கண்டன. பிற்பட்டோர் மற்றும் முஸ்லிம் வாக்கு வங்கி மூலம் சமாஜ்வாதி கட்சியும், தலித் மக்களுடன் முன்னேறிய சமூக வாக்குளையும் இணைத்து பகுஜன் சமாஜ் கட்சியும் அரியணை ஏறின.
கணக்கை மாற்றிய பாஜக
இந்த பரிசோதனைக்கு பிறகு தான் பாஜகவின் வழக்கமான செயல் திட்டங்களும் உ.பி.யில் மாறின. உ.பி.யில் இந்துத்துவ அரசியல் மூலம் முதலில் ஆட்சியை கைபற்றிய பாஜக பின்னாளில் ஜாதி கணக்குகளை மாற்றி வாக்கு வங்கியை பெருக்கும் அஸ்திரத்தை கையில் எடுத்தது. இந்த மூன்று கட்சிகளின் அரசியல் விளையாட்டில் காங்கிரஸ் கரைந்தது.
2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் இந்த புதிய சாதிய அரசியல் கணக்கு அக்கட்சிக்கு பெரும் வெற்றியை அள்ளித் தந்தது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 71 தொகுதிகளை பாஜக கூட்டணி கைபற்ற இந்த உத்தி உதவியது.
காங்கிரஸோடு சேர்த்து, ஏனைய இரு கட்சிகளையும் முறியடிக்க, பாஜக கையில் எடுத்த உத்தி இதுதான். மாயாவதியின் சமூகமான ஜாதவ்கள் நீங்கலான பட்டியலின சாதிகள், முலாயம் சிங் சமூகமான யாதவர்கள் நீங்கலான பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பிரதானப்படுத்தியதோடு, இந்துத்துவத்தையும் கலந்த ஒரு அரசியலை உருவாக்கியது.
இந்த பார்முலா 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அதன் பிறகு 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும், பின்னர் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு பெரும் வெற்றியை தந்தது.
அகிலேஷின் புதிய உத்தி?
இந்த சூழலில் தான் பாஜகவின் புதிய ஜாதிய கணக்கை உடைக்கும் முயற்சியில் அகிலேஷ் யாதவ் ஈடுபட்டுள்ளார். அதாவது யாதவர் அல்லாத மற்ற பிற்பட்ட சாதியினரை ஒன்றிணைக்கும் பாஜகவின் தந்திரத்துக்கு தடைபோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன் ஒருகட்டமாக பாஜக தலைமை மீதும், முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதும் அதிருப்தியில் உள்ள மவுரியா, குஷ்வாகா போன்ற சாதியை சேர்ந்த பாஜக தலைவர்களுக்கு வலைவீசி வருகிறார். இந்த முயற்சியில் முதல் வெற்றியையும் அகிலேஷ் பெற்றுள்ளார். மூன்று அமைச்சர்கள், 8 எம்எல்ஏக்கள் என பாஜக மூத்த தலைவர்களை தனது அணிக்கு கொண்டு வந்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகியவர்கள் அனைவரும் ஒரே குரலில் பதிவு செய்துள்ள தகவல் ‘‘தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் புறக்கணிக்கப்படுகின்றனர்’’ என்பது தான். ஒவ்வொருவரும் பதவி விலகும்பாது தங்கள் ராஜினாமா கடிதத்தில் மறக்காமல் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
இதன் மூலம் பாஜக என்பது உயர் ஜாதியினரின் கட்சி என்ற குற்றச்சாட்டை வலிமையடைச் செய்ய அகிலேஷ் யாதவ் முயல்வது வெளிப்படையாக தெரிகிறது. யோகி ஆதித்யநாத், தாக்கூர் வகுப்பினருக்கு முக்கியத்துவம் கொடுத்தது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் சமாஜ்வாதி கட்சி கூறி வருகிறது.
கடந்த சில நாட்களாக உ.பி.யில் ‘தாக்கூர் ராஜ்’ என்ற குற்றச்சாட்டை யோகி அரசு மீது சமாஜ்வாதி கட்சி முன் வைக்கிறது. அதாவது பிற்படுத்தப்பட்ட சமூக வாக்குகளை எப்படியாவது பாஜகவுக்கு எதிராக திரட்ட வேண்டும் என்ற இலக்குடன் அகிலேஷ் இயங்கி வருவது தெளிவாகிறது.
பாஜகவுக்கு மிக முக்கியம்
கடந்த மக்களவைத் தேர்தலிலும்கூட, பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்கு, உத்தரப் பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற அதிகமான தொகுதிகளே அடித்தளமாக அமைந்தன. அதுமட்டுமல்ல, 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது பாஜக. அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் அதற்கும் உ.பி. பாஜகவின் கோட்டையாக இருப்பது மிகவும் அவசியம் என்பதை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் உணர்ந்து இருக்கிறார்கள்.
இதனால் தான் மேற்கு உத்தர பிரதேச பொறுப்பை அமித் ஷா நேரடியாகவே ஏற்றுக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி உ.பி. முதல்வராக மட்டுமின்றி தேசிய அளவிலும் ஜொலிப்பார் என யோகி ஆதித்யநாத் மீது பாஜகவினர் நம்பிக்கை வைத்துள்ளனர். இது நடைபெற வேண்டுமென்றால் யோகி ஆதித்யநாத்துக்கும் இந்த தேர்தல் மிக முக்கியம்.
ஆனால் பாஜகவில் இருந்து மூத்த தலைவர்கள் விலகி சமாஜ்வாதி கட்சியில் இணையும் நிகழ்வை பாஜக தலைமை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
‘‘பாஜகவில் பீதி எதுவும் இல்லை. கட்சியின் நிலை முன்பை விட வலுப்பெற்றுள்ளது. பாஜகவில் புதியவர்கள் இணைந்துள்ளனர். காங்கிரஸில் இருந்து நரேஷ் சைனியும், சமாஜ்வாதி கட்சியில் இருந்து முலாயம் சிங்கின் சம்மந்தி ஹரிஓம் யாதவும் பாஜகவில் இணைந்துள்ளனர். நாங்கள் கட்சியை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் உள்ளோம்’’ எனக் கூறுகிறார் பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி.
பாஜக திட்டம் என்ன?
அப்படியானால் பாஜக என்ன திட்டத்தில் உள்ளது? பாஜக எம்எல்ஏக்கள் பலர் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் என பலருக்கும் இந்த முறை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாது என்பதை கட்சி மேலிடம் தெளிவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள தற்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் கட்சி மாறி வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ‘கிளியர் இமேஜ்’ என்ற ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை முழுமையாக ஒன்றிணைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதும் பாஜகவின் கணக்கு. ஏனெனில் யாதவர்களின் அரசியலை குர்மி போன்ற வலிமையான பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் தான் கடுமையாக எதிர்க்கின்றன. இந்த சமூகங்களை தங்கள் பக்கம் அணி திரட்டும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.
அதுபோலவே பிற்படுத்தப்பட்டோர் அரசியலுக்கு எதிரான தலித் வாக்கு வங்கியையும் ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தலித் சமூக வாக்கு வங்கியை தங்கள் பக்கம் கொண்டு வரும் தங்கள் முயற்சி வெற்றி பெறும் என பாஜக நம்புகிறது. கடந்த 5 ஆண்டுகாலமாக மத்திய, மாநில அரசுகள் மூலமாக ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவை வரும் தேர்தலில் பெரிய அளவில் கைகொடுக்கும் என பாஜக தலைவர்கள் நம்புகின்றனர்.
மேலும் அகிலேஷ் செய்யும் பிரச்சாரத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் முயற்சியிலும் உள்ளூர் பாஜக தலைவர்கள் இறங்கியுள்ளனர். அதாவது முற்பட்ட சமூக வாக்குகளை முழுமையாக தங்கள் பக்கம் கொண்டு வர பாஜக திட்டமிடுகிறது.
கரையும் பகுஜன், காங்கிரஸ்?
இதனால் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள் கரைந்து அது பாஜக பக்கம் நகரக்கூடும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். எப்படியாகினும் ஆளும் கட்சியில் இருந்து ஆட்களை தங்கள் அணிக்கு இழுத்ததன் மூலம் பாஜக வலிமை இழந்து விட்டதான தோற்றத்தை உருவாக்கியதன் மூலம் சமாஜ்வாதி கட்சி முதல் வெற்றியை பெற்றுள்ளது. ஆனால் அடுத்தகட்ட நகர்வு என்பது பாஜகவின் எதிர் நடவடிக்கை மூலமே வெளிப்படக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT