Published : 15 Jan 2022 06:57 AM
Last Updated : 15 Jan 2022 06:57 AM

பாஜக ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக உள்ளனர்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவு

போபாலில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தங்கள் பயிற்சியை முடித்துச் சென்றபோது வாழ்த்தி வழியனுப்பிய முஸ்லிம்கள்.

பாஜக ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவு தெரிவித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் (MRM) இதுதொடர்பாக துண்டுப் பிரசுரங்களைத் தயார் செய்து தேர்தல் நடக்கவுள்ள உத்தர பிரதேசம், உத்தர்காண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் விநியோகிக்கத் தடாராக வைத்துள்ளதாக அமைப்பின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ஷாகித் சயீது தெரிவித்துள்ளார்.

அந்தத் துண்டுப் பிரசுரங்களில் நரேந்திர மோடி ஆட்சி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய சமுதாயத்துக்காக செய்த நலத் திட்டங்கள் என 36 திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் நயி ரோஷ்னி, ரயா சவேரா, நயி உடான், ஷீக்கோ அவும் காமாவோ, உஸ்தாத், நயி மன்ஸில் ஆகிய திட்டங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், "பாஜக ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாகவும் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றன. பாஜகவால் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல், பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் தூக்கி எறியப்படுவார்கள் போன்ற போலிப் பிரச்சாரங்களை அக்கட்சிகள் மேற்கொள்கின்றன. இப்படிச் சொல்பவர்கள் கடந்த 7 ஆண்டுகளில் எத்தனை இஸ்லாமியர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர் என்ற விவரத்தைக் கூற வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் முஸ்லிம்களுக்கு வறுமை, கல்வியின்மை தான் மிஞ்சியது. முத்தலாக் என்ற மோசமான நடைமுறை அமலில் இருந்தது. ஆனால், 2014ல் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் மதக் கலவரங்கள், மத ரீதியான வன்முறைகள் குறைந்துள்ளன. பாஜக தான் முஸ்லிம்களின் மிகப்பெரிய நலன் விரும்பி. ஆகையால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளின் வலையில் விழுந்துவிட வேண்டாம். உங்கள் வாக்குகளை விவேகத்துடன் பதிவிடுங்கள். சிறு தவறும் பெருங்கவலையைச் சேர்க்கும்" என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x