Published : 13 Jan 2022 02:57 PM
Last Updated : 13 Jan 2022 02:57 PM
லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், உன்னாவ் நகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய பெண்ணின் தாய்க்கு வேட்பாளராகப் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உன்னாவ் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் தற்போது சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்பாளர்ப் பட்டியலை உறுதி செய்வதில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி முதல் கட்டமாக 50 பெண் வேட்பாளர்கள் அடங்கிய 125 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று இந்தப் பட்டியலை வெளியிட்டார்.
இதில், நாட்டையே உலுக்கிய உன்னவ் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட 19 வயது பெண்ணின் தாய் ஆஷா சிங்குக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உன்னாவ் பங்கார்மாவ் தொகுதியில் ஆஷா சிங் போட்டியிடுகிறார். கடந்த 2017-ம் ஆண்டு இதே தொகுதியில் பாஜக வேட்பாளராக குல்தீப் செங்கார் போட்டியிட்டு வென்றார், இந்த முறை அதே தொகுதியில் அவரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் சார்பில் ஒருவர் போட்டியிடுகிறார்.
தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பிரியங்கா காந்தி, “எங்கள் வேட்பாளர் பட்டியல் புதிய செய்தியை கூற வேண்டும். பாலியல் பலாத்காரம், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும். நான் ஒரு பெண்; என்னால் போட்டியிடமுடியும். இதுதான் தேர்தலில் காங்கிரஸின் கோஷம். 40 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரச்சினைக்கு வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும். கட்சியை வலுப்படுத்துவதுதான் நம்முடைய இலக்கு. எதிர்மறையாகப் பிரச்சாரம் செய்யாமல், வளர்ச்சி பற்றியும், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் வளர்ச்சி பற்றியும் இருக்கும். தேர்தலுக்குப்பின் நான் உத்தரப் பிரதேசத்தில்தான் இருப்பேன்; கட்சியை தொடர்ந்து வலுப்படுத்துவேன்” எனத் தெரிவித்தார்.
ஆஷா சிங் தவிர, கோண்ட் பழங்குடியினரின் உரிமைக்காகப் போராடிய ராம்ராஜ் கோண்டுக்கும் காங்கிரஸ் சார்பில் சீட் வழங்கப்பட்டுள்ளது. சோன்பத்ராவில் உள்ள உம்பா கிராமத்தில் கோண்ட் பழங்குடியினருக்கான நிலம் தொடர்பான சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டதால், ராம்ராஜுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சோன்பத்ரா மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் ராம்ராஜ் இருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் ஷாஜகான்பூரில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்திக்கச் சென்ற ஆஷா பணியாளர் பூனம் பாண்டேவுக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சதாப் ஜாபருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT