Published : 13 Jan 2022 01:40 PM
Last Updated : 13 Jan 2022 01:40 PM
லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோரின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் உத்தப் பிரதேச பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ளார். மொத்தம் 125 பேர் கொண்ட அந்த வேட்பாளர் பட்டியலில் 50 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
125 பேர் கொண்ட வேட்பாளர்களில், 2017-ம் ஆண்டு பாஜக எம்எல்ஏ ஒருவரால் வன்கொடுமை செய்யப்பட்ட உன்னாவ் சிறுமியின் தாய் ஆஷா சிங்கும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் உன்னாவ் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். இதேபோல் உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள உம்பா கிராமத்தில் நிலம் தொடர்பான கோண்ட் பழங்குடியினரின் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த ராம்ராஜ் கோண்ட் என்பவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் ஷாஜஹான்பூரில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க முயன்றபோது காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர் பூனம் பாண்டே என்பவரும் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். CAA எதிர்ப்பு போராட்டத்தால் சிறையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சதாப் ஜாபர் வேட்பாளராகியுள்ளார்.
சில மாதங்கள் முன் உத்தரப் பிரதேச தேர்தலில் 40 சதவீத டிக்கெட்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவித்திருந்தார். அதன்படி, மொத்தமுள்ள 125 வேட்பாளர்களில் 40 சதவீதம் பேர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வேட்பாளர்களில் 40 சதவீதம் பேர் இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் பேசிய பிரியங்கா, "மொத்தமுள்ள 125 வேட்பாளர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் 40 சதவீதம் பேர் இளைஞர்கள். மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பாலின சமத்துவத்தில் கவனம் செலுத்தி பெண்களுக்கு முக்கியவத்துவம் கொடுத்துள்ளோம். நீங்கள் துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகியிருந்தால், காங்கிரஸ் உங்களுக்கு ஆதரவளிக்கும் என்பதற்கு சான்றே இந்தப் பட்டியல். இந்த வரலாற்று முயற்சியின் மூலம், மாநிலத்தில் ஒரு புதிய அரசியலை கொண்டு வருவோம் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT