Published : 13 Jan 2022 11:22 AM
Last Updated : 13 Jan 2022 11:22 AM
புதுடெல்லி: கரோனா சிகிச்சைக்கு ஏன் 7 நாட்கள் வீட்டுத் தனிமை பரிந்துரைக்கப்படுகிறது என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக அதன் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்கவா கூறியிருப்பதாவது:
ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும்கூட முதல் நாளில் அவருக்குப் பரிசோதனை செய்தால் முடிவு நெகட்டிவ் என்றே வரும். அது ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட், ஆர்டி-பிசிஆர் என எந்தப் பரிசோதனையாக இருந்தாலும் அவ்வாறே தெரியும்.
வைரஸ் உடலில் பல்கிப் பெருக நேரமெடுப்பதால் அவ்வாறு தெரிகிறது. இதனை மறைந்திருக்கும் காலம் எனக் கூறுகிறோம். மூன்றாவது நாள் முதல் எட்டாவது நாள் வரை லேட்டரல் ஃப்ளோ டெஸ்ட்களில் கரோனா இருப்பது தெரிந்துவிடும். அதனாலேயே சிகிச்சை முடித்து வீட்டுக்கு அனுப்புதல் மற்றும் வீட்டுத்தனிமைக்கு 7 நாட்கள் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் போது நோய் பாதித்தவருக்கு 8 நாட்களுக்குப் பின்னரும் பாசிடிவ் என்றே காட்டும். ஏனெனில் தொற்றை ஏற்படுத்தாத RNA துகள்கள் பாசிடிவ் முடிவைக் காட்டும். ஒமைக்ரானை அறிய லேட்டரல் ஃப்ளோ டெஸ்ட்டுகளே சிறந்ததாக உள்ளன.
அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளபடி, கரோனா உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த ஹை ரிஸ்க் கான்டாக்ட்ஸ், மாநிலங்களுக்கு இடையே பயணிப்போர் ஆகியோர் கோவிட் பரிசோதனை செய்து கொள்ளத் தேவையில்லை.
அதேபோல், அறிகுறிகளற்ற தனிநபர்கள், டிஸ்சார்ஜ் ஆன கோவிட் நோயாளிகள் ஆகியோரும் சோதனை செய்துகொள்ளத் தேவையில்லை.
ஆனால், இவர்கள் அனைவருமே கட்டாயமாக 7 நாட்கள் வீட்டுத் தனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
அறிகுறிகள் உள்ளவர்கள், வீட்டில் மேற்கொள்ளும் ரேப்பிட் ஆன்டிஜன் சோதனையில் நெகடிவ் என வந்தால் உடனே ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆர்டி-பிசிஆர் (RT-PCR), ட்ரூநேட் (TrueNat), சிபிநேட் (CBNAAT), கிறிஸ்பிஆர் (CRISPR), ஆர்டி லேம்ப் (RT-LAMP), ரேபிட் மாலிகுலார் டெஸ்டிங், (Rapid Molecular Testing), ரேபிட் ஆன்டிஜென் (rapid-antigen) ஆகிய பரிசோதனைகள் மூலமும் கரோனாவை உறுதிப்படுத்தலாம்.
இவ்வாறு மருத்துவர் பல்ராம் பார்கவா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT