Published : 13 Jan 2022 06:22 AM
Last Updated : 13 Jan 2022 06:22 AM

சீன அச்சுறுத்தல் குறையவில்லை: இந்திய ராணுவத் தளபதி நரவனே தகவல்

புதுடெல்லி

லடாக் எல்லையில் படை விலக்கல் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் போதிலும், அங்குசீனாவால் எழுந்துள்ள அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை எனஇந்திய ராணுவத் தலைமை தளபதி எம்.எம். நரவனே தெரிவித்தார்.

லடாக்கின் கிழக்கு எல்லையில்2020-ம் ஆண்டு மே மாதம் சீனாஅத்துமீறி ஊடுருவ முயன்றதை இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். இதன் தொடர்ச்சியாக, அதே ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவவீரர்களுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து லடாக்கின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் இந்தியாவும், சீனாவும்தங்கள் ராணுவத்தை குவித்து வந்தன. பின்னர், இரு நாடுகளுக்குஇடையே நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து, பல பகுதிகளில் இருந்து ராணுவப் படைகளை இரு நாடுகளும் திரும்பப் பெற்றன. எனினும், ஹாட்ஸ்பிரிங்ஸ், பாங்காங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்துபின்வாங்க சீன ராணுவம் மறுத்ததால் அங்கு இந்திய ராணுவமும் படைகளை குவித்துள்ளது.

இந்நிலையில், படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியா – சீனா இடையே 14-வதுகட்ட ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை சீனாவின் மால்டோ பகுதியில் நேற்று நடைபெற்றது. இதுதொடர்பாக இந்தியராணுவத் தலைமை தளபதி எம்.எம்.நரவனே டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா – சீனா இடையேயான 14-வது கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தபேச்சுவார்த்தைக்கு பிறகு லடாக்பகுதியில் நல்ல மாற்றங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். படை வாபஸ் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், லடாக்கில் சீனாவால் எழுந்திருக்கும் அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை. ஆனால், அனைத்துவித சவால்களையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சுபன்சிரி மாவட்டத்தில் சீனாகிராமம் ஒன்றை கட்டமைத்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்கெனவே விளக்கி விட்டது. எல்லை பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகண்டால் மட்டுமே இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். சீனா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து எழும் அச்சுறுத்தல்களை ஒருசேர சமாளிக்க இந்தியராணுவம் மறுவரையறை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு நரவனே கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x