Published : 12 Jan 2022 09:53 PM
Last Updated : 12 Jan 2022 09:53 PM
உத்தரப் பிரதேச தேர்தலில் யோகி ஆதித்யநாத், அயோத்தி தொகுதியில் களமிறக்கப்படலாம் என பிரதமர் அலுவலக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக அமைச்சர்கள் இருவர் உள்பட 6 பேர் இரண்டு நாட்களில் கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்துள்ளனர். இதனால் பாஜக மேலிடம் பரபரப்பாக உள்ளது. உத்தரப் பிரதேச தேர்தல் குறித்து நேற்று பாஜக குழு கூடி விவாதித்தது. சுமார் 10 மணி நேரம் இந்தக் கூட்டம் நடந்ததாகத் தெரிகிறது. இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிராந்திய வாரியாக ஆய்வு செய்து அந்தந்த பிரிவு பொறுப்பாளர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டுள்ளார். களநிலவர அறிக்கைகளையும் பெற்றுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், யோகி ஆதிய்நாத்தை அயோத்தி சட்டப்பேரவைத் தொகுதியில் களமிறக்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் தற்போது எம்எல்சி.,யாக இருக்கிறார். ஆகையால் அவரை வரவிருக்கும் தேர்தலில் அயோத்தி தொகுதியில் போட்டியிட வைக்க பின்புலப் பணிகள் நடந்து வருகின்றன எனத் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை பிரதமர் மோடியே வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10 தொடங்கி மார்ச் 7 வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து பிப்ரவரி 10, 14ல் நடைபெறும் தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வேட்பாளர்களை இறுதி செய்தவுடன் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
அயோத்தி தொகுதி அமைந்துள்ள அவாத் பிராந்தியம் சமாஜ்வாதியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. அதேவேளையில், அயோத்தி கோயில் நகரத்தில் பாஜக மேற்கொண்டுள்ள, அறிவித்துள்ள பணிகளால் அங்கு பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆதித்யநாத்தை களமிறக்குவதில் பாஜக மத்திய தேர்தல் குழு உறுதியாக உள்ளதாகவே தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT