Published : 12 Jan 2022 07:32 PM
Last Updated : 12 Jan 2022 07:32 PM
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஆம் ஆத்மி தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்தான் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் எதிர்கொண்ட இரண்டாம் தேர்தல். இதற்கு முன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப்பில் காலூன்றி இருந்த ஆம் ஆத்மி இந்த முறை மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. கடந்த முறை முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட சில சொதப்பல்களால் பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது. ஆனால், இம்முறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்கிற நோக்கில் தீவிரப் பணியாற்றி வருகிறது. கடந்த சில மாதங்களாக பஞ்சாப் காங்கிரஸுக்குள் நிலவி வரும் கோஷ்டி பூசல், வேளாண் சட்டங்களால் பாஜக மீது பஞ்சாப் மக்கள் கொண்டுள்ள அதிருப்தி ஆகியவை ஆம் ஆத்மிக்குத் தேர்தல் களத்தை சாதகமாக்கி உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அதற்கேற்ப, வெற்றி பெற்றால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், அதோடு துணை முதல்வராக பட்டியிலனப் பிரதிநிதி என்பது போன்ற வாக்குறுதிகளை ஏற்கெனவே அறிவித்த ஆம் ஆத்மி தற்போது புதிய பஞ்சாப் மாடல் திட்டத்தை அறிவித்துள்ளது. இன்று பஞ்சாப் சென்றிருந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், 'பஞ்சாப் மாடல்' திட்டத்தை வெளியிட்டுப் பேசினார்.
தனது பேச்சில் "பஞ்சாப் மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து காங்கிரஸ் கட்சி 25 ஆண்டுகளும், அகாலி தளம் கட்சி 15 ஆண்டுகளும் ஆட்சி செய்துவிட்டன. இவர்கள் இனி வேண்டாம் என மக்கள் முடிவெடுத்துவிட்டனர். பஞ்சாப் மக்கள் பஞ்சாபியின் சர்க்கார் உருவாக ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளனர். நான் பஞ்சாப் முழுவதும் சென்று பிரச்சினைகளை அறிந்துகொண்டேன். அதனடிப்படையில் பத்து வாக்குறுதிகள் கொண்ட 'பஞ்சாப் மாடல்' தயாரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தவர், அந்த பத்து வாக்குறுதிகள் குறித்தும் பேசினார்.
வேலைவாய்ப்பு: பஞ்சாப்பில் ஒவ்வொரு வீட்டிலும் வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது. ஒரு பஞ்சாப் இளைஞன் வேலையில்லா திண்டாட்டத்தால் கனடா செல்லும் நிலை உள்ளது. ஆம் ஆத்மிக்கு வாக்களித்தால் கனடா போனவர்கள் எல்லாம் ஐந்தாண்டுகளில் திரும்பி வரும் வகையில் பஞ்சாப்பை உருவாக்குவோம்.
போதைப்பொருள் அச்சுறுத்தல்: இங்கு கிராமங்களில் போதைப்பொருள் கலாச்சாரம் பெருகியுள்ளது. போதைப்பொருள் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க தற்போதைய காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மொத்த போதைப்பொருள் கும்பலையும், மாஃபியாவையும் ஒழிப்போம்.
சட்டம் - ஒழுங்கு: பஞ்சாப்பில் சமீப காலங்களில் பல படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் ஒரு வழக்கில் கூட தண்டனை வழங்கப்படவில்லை. இதற்குக் காரணம் பெரிய பெரிய ஆட்கள் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டதும், இங்கு ஆட்சி செய்த கட்சிகள் சம்பந்தப்பட்டிருப்பதும்தான். படுகொலை சம்பவங்களால் மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு யாராக இருந்தாலும் இதுபோன்ற ஒவ்வொரு வழக்கிலும் நீதியை நிலைநாட்டுவோம். இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துவோம்.
இதேபோல், 'ஊழலற்ற பஞ்சாப்' திட்டம் கொண்டுவரப்படும். சிறந்த சுகாதார வசதிகள் ஏற்படுத்தும் பொருட்டு சுகாதாரத் துறையின் மூலம் மாநிலம் முழுவதும் 16,000 மொஹல்லா கிளினிக்குகள் திறக்கப்படும்
மேம்படுத்தப்பட்ட கல்வி வசதிகள் கொண்டு வரப்படும். அதேபோல் 300 யூனிட்கள் வரை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். மேலும் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் கொடுக்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க விவசாயம், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் வளர்ச்சிக்கு இணக்கமான சூழல் உருவாக்கப்படும்" என்பன போன்ற வாக்குறுதிகளைத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT