Published : 12 Jan 2022 07:01 PM
Last Updated : 12 Jan 2022 07:01 PM
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக எஸ்.சோம்நாத் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பிஎஸ்எல்வி திட்டத்தின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு கொண்டவர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த சிவன் செயல்பட்டு வந்தார். இவரின் பதவிக் காலம் முடிந்துள்ளதை அடுத்து தற்போது புதிய தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி எஸ்.சோம்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த மூன்றாண்டு காலத்துக்கு சோம்நாத் இஸ்ரோ தலைவராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த சோம்நாத்?
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (விஎஸ்எஸ்சி) தற்போதைய இயக்குநராக இருக்கும் சோம்நாத், கேரளாவைச் சேர்ந்தவர். கொல்லம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ள சோம்நாத், இந்தியன் இன்ஸ்டிடியூட் சயின்ஸில் முதுகலையாக விண்வெளிப் படிப்பை முடித்துள்ளார். "structures, dynamics and control" பிரிவில் நிபுணத்துவம் கொண்ட இவர், 1985-ல் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இணைந்துள்ளார்.
ஆரம்பக் கட்டங்களில் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்புக்கான குழுத் தலைவராக இருந்தவர், பின்னாளில் பிஎஸ்எல்வி திட்ட மேலாளராக உயர்ந்து, பிஎஸ்எல்வி திட்டத்தின் வழிமுறைகள், பைரோ அமைப்புகள், ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கண்காணித்து வந்ததுடன் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். அதேபோல் GSLV Mk-III ஏவுகணை திட்டத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கும் வகித்துள்ளார் சோம்நாத்.
சந்திரயான்-2 மிஷனில் தரையிறங்கும் இயந்திரங்களை உருவாக்கியது மற்றும் ஜிசாட்-9 மிஷனில் மின்சார உந்துவிசை அமைப்பை முதன்முறையாக வெற்றிகரமாகப் பறக்கவிட்டது போன்றவை சோம்நாத்தின் சாதனைகளில் முக்கியமானவை. இவரின் நியமனத்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT