Published : 12 Jan 2022 05:29 PM
Last Updated : 12 Jan 2022 05:29 PM

உலகின் பழமையான தமிழ் மொழியில் சில வார்த்தைகள் பேச வாய்ப்பு கிடைத்தது; எனது வாழ்வின் மகிழ்ச்சியான தருணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் பழமையான மொழியான தமிழில் சில வார்த்தைகள் பேச வாய்ப்பு கிடைத்தது, எனது வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ரூ.4,000 கோடிமதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று விருதுநகரில் நடக்கும் விழாவில் நேரில் கலந்து கொண்டு திறந்துவைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா பரவல் காரணமாக பிரதமரின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் இன்று திறந்து வைத்தார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் இணையம் வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

2014-ல் நம் நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் இந்த எண்ணிக்கை 596 மருத்துவக் கல்லூரிகளாக உயர்ந்துள்ளன. 2014 ஆம் ஆண்டுக்கு முன் நாட்டில் ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன, ஆனால் தற்போது, அனுமதிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

வரவிருக்கும் ஆண்டுகளில், தரமான மற்றும் மலிவு விலையில் பராமரிப்புக்கான இலக்காக இந்தியா இருக்கும் என்று நான் கருதுகிறேன். மருத்துவச் சுற்றுலாவுக்கான மையமாகத் தேவையான அனைத்தையும் இந்தியா கொண்டுள்ளது, மேலும் டெலிமெடிசினையும் தீவிரமாக மேற்கொள்ளுமோறு மருத்துவ சகோதரர்ளை கேட்டுக்கொள்கிறேன்.

செழுமையான தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தால் எப்போதுமே நான் ஈர்க்கப்படுகிறேன். ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் பழமையான மொழியான தமிழில் சில வார்த்தைகள் பேச வாய்ப்பு கிடைத்தது. எனது வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் அதுவும் ஒன்று.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x