Published : 12 Jan 2022 04:53 PM
Last Updated : 12 Jan 2022 04:53 PM

அடுத்த விக்கெட்: உ.பி.யில் பாஜகவுக்கு மீண்டும் அதிர்ச்சி; மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா

பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்துடன் ராஜினாமா செய்த அமைச்சர் தாராசிங் சவுகான்: கோப்புப் படம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் இருந்து இரண்டாவது அமைச்சரான தாரா சிங் சவுகான் விலகியுள்ளார்.

நேற்று சுவாமி பிரசாத் மவுரியா ராஜினாமா செய்து விட்டு அகிலேஷ் யாதவை சந்தித்ததை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி ராஜினாமா அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் தேதியை நேற்றுமுன்தினம் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது.

இந்த நிலையில், மாநிலத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் அக்கட்சியிலிருந்து நேற்று விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் மவுரியா சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரும் அகிலேஷ் யாதவை சந்தித்தினர்.

இந்தநிலையில் அடுத்த பரபரப்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் இருந்து இரண்டாவது அமைச்சரான தாரா சிங் சவுகான் இன்று பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தாராசிங்

தனது ராஜினாமா குறித்து தாராசிங் அனுப்பியுள்ள கடிதத்தில் ‘‘நான் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தேன், ஆனால் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பிரிவினர், தலித்துகள், விவசாயிகள் மற்றும் வேலையற்ற இளைஞர்கள் மீதான இந்த அரசின் அடக்குமுறை அணுகுமுறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளுக்கான இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுவதால் மனவேதனை அடைந்து ராஜினாமா செய்கிறேன்’’ என்று சவுகான் தனது ராஜினாமா கடிதத்தில் எழுதியுள்ளார்.

சுவாமி பிரசாத் மௌரியா பயன்படுத்திய அதே மொழியில் இவரும் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் உத்திரபிரதேச தேர்தலுக்கு முன்னதாக யோகி அணியில் இருந்து விலகிய இரண்டாவது இதர பிற்படுத்தப்பட்ட தலைவர் தாராசிங் ஆவார்.

சுவாமி பிரசாத் மௌரியா

இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு சவுகானை வலியுறுத்தி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ட்வீட் ஒன்றை வெளியிட்டார்.

‘‘குடும்பத்தில் யாராவது வழிதவறிச் சென்றால், அது மிகவும் வருத்தமாக இருக்கிறது. செல்லும் மரியாதைக்குரிய தலைவர்களிடம் மட்டுமே நான் வேண்டுகோள் விடுக்கிறேன், தயவு செய்து மூழ்கும் கப்பலில் ஏறாதீர்கள், இல்லையெனில் அது அவர்களுக்கு நஷ்டம். மூத்த சகோதரர் தாரா சிங், தயவுசெய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்’’ என கேசவ் பிரசாத் மௌரியா தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவுடன் தாராசிங் சவுகான்

நேற்று ராஜினாமா செய்த சுவாமி பிரசாத் மௌரியாவிடமும் இதே வேண்டுகோளை பாஜக தலைவர்கள் விடுத்தனர். கிழக்கு உ.பி.யைச் சேர்ந்த தாராசிங் சவுகான், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து (பிஎஸ்பி) 2015-ல் விலகி பாஜகவில் இணைந்தார். 2009 முதல் 2014 வரை பிஎஸ்பி எம்பியாக இருந்தார்.

அவர் பாஜகவில் இணைந்தபோது, கட்சியின் ஓபிசி பிரிவின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார். பிஎஸ்பி-பாஜக-சமாஜ்வாதி என மற்ற சிலரை போலவ இவரும் மாறி வந்துள்ளார்.

இந்தியாவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு அமைச்சர்கள் மற்றும் நான்கு எம்எல்ஏக்கள் விலகியுள்ளது பாஜகவுக்கு பெரும் அடியாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x