Published : 12 Jan 2022 04:08 PM
Last Updated : 12 Jan 2022 04:08 PM
புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்கு குறைபாடு ஏற்பட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான குழு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த ஐந்தாம் தேதி பிரதமர் மோடி விமானம் மூலம் பஞ்சாப் சென்றார். மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், விவசாயிகள் போராட்டம் காரணமாக அவரது வாகன அணி வகுப்பு மேம்பாலத்தில் 15 நிமிடத்துக்கும் மேலாக நின்றது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தனது பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்து பிரதமர் பாதி வழியிலேயே டெல்லி திரும்பினார். பிரதமரின் பாதுகாப்பில் மாநில அரசு அலட்சியமாக செயல்பட்டதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாஜகவினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் பஞ்சாப் அரசுகள் தனித்தனியாக விசாரணைக் குழு அமைத்தன. அதேநேரம் என்ஜிஓ வழக்கறிஞர் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கொண்டுச் செல்ல கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி ஆகியோர் அமர்வு விசாரித்தது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் விசாரணைக் குழுக்கள் இந்த வழக்கில் விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் நாங்களே ஒரு விசாரணை குழுவை அமைக்கிறோம் என தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா செயல்படுவார் என்றும், குழுவின் உறுப்பினர்களாக பஞ்சாப் காவல்துறை தலைவர் (பாதுகாப்பு), தேசிய புலனாய்வு முகமை இயக்குநர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் இடம் பெறுவர்கள் எனவும் உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT