Published : 12 Jan 2022 08:23 AM
Last Updated : 12 Jan 2022 08:23 AM
புதுடெல்லி: "உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று நம் அனைவருக்கும் ஏற்படும். பூஸ்டர் தடுப்பூசிகள் ஒமைக்ரான் பரவலைத் தடுக்காது என" தேசிய தொற்றுநோய்கள் மையத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் மருத்துவர் ஜெய்பிரகாஷ் முலியில் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்தப் பேட்டியின் விவரம் வருமாறு:
இந்தியாவில் அனைவருக்குமே உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்படும். பூஸ்டர் தடுப்பூசிகள் ஒமைக்ரான் பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்தாது. உலகம் முழுவதுமே பூஸ்டர் தடுப்பூசிகளையும் தாண்டி ஒமைக்ரான் பரவியதற்கான தரவுகள் உள்ளன.
கரோனா இன்னமும் அச்சுறுத்தும் நோயாக இல்லை. இந்த உருமாறிய கரோனா மிதமானது. இந்த வைரஸ் தாக்கத்தினால் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதியாகும் சூழல் குறைந்துள்ளது. நம்மால் கையாள முடிந்த நோயாகவே ஒமைக்ரான் உள்ளது. இதன் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை. ஒமைக்ரான், இப்போது சாதாரண சளியைப் போன்றே இருக்கிறது.
தொற்று ஏற்படுவதன் மூலம் உண்டாகும் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றல் ஆயுள் முழுவதும் நீடிக்கக் கூடும். இந்தியாவில் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரே 85% மக்களுக்கு தொற்று ஏற்பட்டுவிட்டது. அதன் பின்னர் மக்கள் எடுத்துக் கொண்ட முதல் டோஸ் தடுப்பூசியே பூஸ்டர் டோஸ் போன்றது தான்.
மருத்துவத் துறையில் ஒரு தத்துவம் உண்டு. இயல்பாக ஏற்படும் தொற்று நீடித்த நோய் எதிர்ப்பாற்றலைத் தராது எனக் கூறுவார்கள். ஆனால் அதை மாற்றும் நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன்.
பூஸ்டர் டோஸ் செலுத்த எந்த ஒரு மருத்துவ அமைப்பும் அரசுக்குப் பரிந்துரைக்கவில்லை. பூஸ்டர் தடுப்பூசி பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தாது. அதேபோல், கரோனா தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவதும் தேவையற்றதே. தொற்றானது இரண்டே நாள் இரட்டிப்பாகிவிடும். சோதனை முடிவு வருவதற்குள்ளேயே அந்த நபர் பலருக்கும் தொற்றைப் பரப்பியிருப்பார். ஆகையால் அவ்வாறு சோதனை செய்தாலும் கூட பலனில்லை.
எனது அறிவுக்கு எட்டியவரை முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்தும் யோசனை, 60 வயதுக்கும் மேற்பட்ட சிலருக்கு 2 டோஸ் தடுப்பூசியால் பலனில்லை என்று வந்த தகவலின் அடிப்படையிலேயே முன்வைக்கப்பட்டது.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தான் இணை நோய் இருக்குமா, 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு இணை நோய்கள் இருக்காதா? அவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தேவைப்படாதா? என்று சிலர் கேட்கின்றனர். ஒருவருக்கு சர்க்கரை வியாதியும், இதய நோயும் இருக்கிறது என்பதாலேயே அவரது எதிர்ப்பாற்றல் திறனற்றதாகிவிடாது. அதேவேளையில் சிறுநீரக மாற்றத்துக்காக காத்திருப்போர் போன்றோருக்கு நிச்சயமாக எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT